திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது எம்.ஜி.ஆர் நகர். இந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன். இவரது மகன் சக்திவேல். +2 தேர்வில் 1,167 மதிப்பெண்கள் பெற்றார். இவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் பணம் இல்லாததால் கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கிறார்.
சக்திவேலின் குடும்பத்திற்கென்று சொந்தமாக வீடு இல்லாததால், தமிழக அரசு வழங்கிய இடத்தில் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். சக்திவேல் தாயார் லட்சுமி தையல் தொழில் செய்து வருகிறார்.
வறுமையான சூழலிலும் சக்திவேல் சிறப்பாக படித்து 10ம் வகுப்பில் 480 மதிப்பெண்கள் பெற்றார். அவர் படித்த ஊத்தங்கரை தனியார் பள்ளி நிர்வாகம் மேற்படிப்பில் (ப்ளஸ் 2) சேர்த்துக்கொண்டது. அங்குள்ள ஆசிரியர்களின் உதவியால நல்ல முறையில் படித்து +2 தேர்வில் 1,167 மதிப்பெண் பெற்றார்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் வறுமை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கிறார் சக்திவேல்.
இவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று, பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
மேலும், “ஒரு சினிமா காட்சிக்காக 3000 ரூபாய் வரை செலவிடுவோர் வசிக்கும் அதே தமிழகத்தில்தான், கல்விக்கு பணமின்றி தவிப்போரும் இருக்கிறார்கள்.
வாய்ப்பும் விருப்பமும் உள்ளவர்கள் சக்திவேலுவுக்கு உதவ வேண்டும். அப்படி செய்தால் சக்திவேல் மகிழ்ச்சி அடைவார் ” என்று கூறுகின்றார்கள் சமூக ஆர்வலர்கள்.
( செய்தி நன்றி:: நியூஸ் 7)