கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவதை தடுக்க தன்னால் இயன்ற உதவிகளை  செய்வதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். அதே போல சில விவசாயிகளுக்கும் உதவி செய்தார்.
மேலும் தஞ்சை பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப்போவதாகவும் அறிவித்தார். விவசாய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், கரும்பு விவசாயிகள் அமைப்பு ஒன்று, விஷாலுக்கு பாராட்டுவிழாவும், கலந்துரையாடலும் நடத்த முடிவு செய்தது. இதற்காக விஷாலை அணுகியபோது அவரும் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து இன்று சென்னை அசோகா ஓட்டலில் இதற்கான நிகழ்ச்சியை, கரும்பு விவசாய அமைப்பினர் ஏற்பாடு செய்தனர். குறித்த நேரத்துக்கு அவர்கள் வந்துவிட்டனர். செய்தி சேகரிக்க ஊடகத்தினரும் வந்துவிட்டார்கள்.
ஆனால் விஷாலை காணவில்லை. நிகழ்ச்சி அமைப்பினர் விஷாலை தொடர்புகொண்டபோது, அவரது உதவியாளர், “ இன்னும் சிறித நேரத்தில் வந்துவிடுவார்” என்று கூறினார்.
2
இதனால் நிகழ்ச்சி அமைப்பினர் காத்திருந்தார்கள். ஆனால் விஷால் வரவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டபோதும், விஷாலிடமிருந்து பதில் இல்லை. ஒரு கட்டத்தில் அந்த போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. நீண்ட நேரம் பொறுத்துப் பார்த்த நிகழ்ச்சி அமைப்பினர், வெறுத்துப்போயினர்.
இதனால் விஷாலுக்கு பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடலை, விஷாலின் படத்தை வைத்து நடத்தி முடித்தனர். அதாவது மேடையில் விஷாலுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில், அவரது புகைப்படத்தை வைத்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்.  (படத்தில் மூவருக்கு நடுவில் உள்ள இருக்கையை பாருங்கள்.)
பொன் வைக்குமிடத்தில் பூவைப்பது போல என்பார்கள். இங்கே ஆள் வராத போது, அவரது படத்தை வை என்று புதுவழி கண்டுபிடித்திருக்கிறார்கள்.