சிறையில் தாக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷை தாக்கியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் யார்வலர் பியூஷ் மனுஷ், சேலம் முள்ளுவாடி கேட் பகுதி ரயில் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 8-ஆம் தேதி போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவரை, அவரது மனைவி மோனிகா பார்த்து வந்தார். பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “சிறைக்குள் வைத்து எனது கணவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது” என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டைக் கூறினார்.
மேலும் அவர், “என் கணவரை நான் சிறையில் பார்த்தபோது தேம்பித் தேம்பி அழுதார். எங்களுக்கு திருமணமான இந்த 16 வருடங்களில் அவர் எதற்கும் கலங்கி நான் பார்த்ததில்லை. பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். சிறைவாசத்துக்காக பயப்படுபவரும் அல்ல.
ஆனால் இந்த முறை சிறை அதிகாரிகள் அவரை கடுமையாக துன்புறுத்தி இருக்கிறார்கள். “வெற்று காகிதத்தில் கையெழுத்துப் போடச் சொல்லியும், கமிஷனரிடமும், எஸ்.பி-யிடமும் மன்னிப்பு கேட்கச் சொல்லியும் சிறை அதிகாரிகள் அடிக்கிறார்கள்” என்று என் கணவர் அழுதுகொண்டே கூறினார்.
போலீசார் அடித்து அவர் காலை உடைத்துவிட்டார்கள். என்னிடம் பேசிய பிறகு நொண்டியபடியேதான் திரும்பிச் சென்றார்.
எங்களது வழக்கறிஞர் சிறைக்குள் பியூஷை சந்தித்தபோது, முப்பது சிறைக்காவலர்கள் தன்னை ஒரு மணி நேரத்துக்கும் மேல் அடித்து உதைத்ததாகவும் சாப்பாடோ தண்ணீரோ கொடுக்காமல் சித்ரவதை செய்வதாகவும் பியூஷ் தெரிவித்திருக்கிறார்” என்று பியூஷ் மனைவி மோனிகா தெரிவித்தார்.
உள்குத்து!
இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்:
“பியூஷ் மானுஷூடன் கார்த்திக், முத்து ஆகியோரும் சிறைக்கு வந்தனர். அவர்களில் பியூஷ் மானுஷ் என்பவரை கொஞ்சம் தட்டிவைக்கச் சொல்லி சேலம் காவல் உயர் அதிகாரியிடம் இருந்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இதையடுத்து செந்தில்குமார் தன்னுடன் முப்பது காவலர்களை சேர்த்துக்கொண்டு பியூஷை அடித்து நொறுக்கினார்.
இவருக்கும் ஜெயிலர் மருதமுத்துக்கும் எப்போதும் ஆகாது. ஆகவே, பியூஷை ஜெயிலர் மருதமுத்து அடித்து உதைத்ததாக வாட்ஸ்அப் மூலம் தகவலை பரப்பிவிட்டார்.
அதாவது தனது மூத்த அதிகாரி சொல்லியபடி பியூஷை அடித்து நொறுக்கியாயிற்று. அதோடு, தனக்கு பிடிக்காத ஜெயிலர் மருதமுத்து மீது பழியை திருப்பியாயிற்று.
ஒருத்தரை அடித்ததில் இரண்டு பலன்களை பெற்றுவிட்டார் செந்தில்குமார்” என்று சேலம் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன