தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த கீழ்மட்ட காவலர்களுக்கு (காவலர் முதல் ஆய்வாளர் வரையிலானவர்கள்) சங்கம் துவக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், காவலர்களுக்கான உரிமையை அலசுகிறது இந்த வாட்ஸ்அப் கட்டுரை:
“இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைவரையும் முழுமையாக சென்று சேர்கிறதா?
அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமகன் அனைவரும் சுதந்திரமாக வாழ அவர்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கியும், அவைகள் பாதிக்கப்படும் போது நீதிமன்றங்கள் தலையிட்டு அந்த உரிமைகளை நிலைநாட்டவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி மூன்று பிரிவு 19(3) ல் தனி நபர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக அல்லது கழகமாக தமது நலன்களை பாதுகாத்துக் கொள்ள சங்கம் அமைத்துக் கொள்ளும் அடிப்படை உரிமையை வழங்கியுள்ளது.
மேற்கண்ட அடிப்படை உரிமைகளை அரசு மறுக்கும் போது அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 32 ன் படி உச்ச நீதிமன்றத்தையோ அல்லது பிரிவு 226 ன் படி உயர்நீதிமன்றத்தையோ நாடி நிவாரணம் பெறலாம்.
மேற்படி சட்ட உரிமையின் காவலர்கள் சங்கம் வேண்டி அரசிடம் முறையிட்டும் சங்கம் அமைக்க அனுமதி தராததால் நிவாரணம் வேண்டியும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டியும் மதுரையை சேர்ந்த காவலர் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர் அவரின் மனு மீதான விசாரணையை முடித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்கள் காவலர்களுக்கு சங்கம் வேண்டிய மனுவை இன்று தள்ளுபடி செய்துள்ளார் மனுதாரர் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு தரப்பில் காவலர்கள் பிரச்சினைகளை தீர்பதாகவும், அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சங்கம் அமைப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் படியான உரிமை அந்த உரிமை காவலர்களுக்கு உண்டா இல்லையா? காவலர்களுக்கு மேல் நிலையில் உள்ள IPS அதிகாரிகளுக்கே சங்கம் உள்ள போது அதே துறையில் உள்ள கீழ் நிலை காவலர்களுக்கு அந்த உரிமையை மறுப்பது ஏன்? அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அரசாங்கம் அவ்வப்போது சலுகைகளை வாரி வாரி வழங்கி வருகிறது எனவே அவர்களுக்கு மட்டும் சங்கங்கள் அமைத்துக் கொள்ள அனுமதித்திருப்பது ஏன்?
காவலர்களுக்கு சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதித்தால் பாதிப்பு ஏற்படும் என்று அரசு பயப்படுகிறதா? அப்படியென்றால் காவலர்களுக்கு தீர்க்க முடியாத அளவுக்கு அதிகமாக பிரச்சினை உள்ளதை உணர்ந்த அரசு முன்னெச்சரிக்கையாக சங்கம் அமைக்க அனுமதி மறுக்கிறதா? அல்லது உயர் காவல் அதிகாரிகள் அரசிடம் தவறான தகவல்களை தெரிவித்து அரசை திசைதிருப்பும் வேலையை செய்து வருகின்றனரா இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகள்
ஆக மொத்தம் மனித உரிமைகள் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அனைவரையும் சென்று சேரவேண்டும் அப்போது தான் சமூகம் சமப்படும் அதுவே ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கும்!