சென்னை:
திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, கடந்த மே 13ம் தேதியன்று திருப்பூரில் 570 கோடி ரூபாய் ரொக்கத்தை கொண்டு சென்ற 3 கன்டெய்னர் லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.
rupee6
அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும், ஆந்திராவில் உள்ள கரன்சி மையத்துக்கு கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதே  போல, ரிசர்வ் வங்கி அனுமதியுடன் ரூ. 570 கோடி எடுத்துச் செல்லப்பட்டதாக எஸ்பிஐ கடிதம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் அவர், “இவ்வளவு பெரும் தொகையை கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி வாய்மொழி உத்தரவு வழங்காது. எனவே, இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சாலை வழியாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பெரும் தொகையை எப்படி அனுப்ப முடியும்? வழக்கமாக இதுபோன்ற பெரும் தொகை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரயில் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பல மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரூ. 570 கோடி பணம் தங்களுடையது என எஸ்பிஐ ஏற்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி நீலகிரி மாவட்டத்தில் இருந்து 8 கண்டெய்னர் லாரிகளில் பணம் ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதில் 3 லாரிகள் மட்டும் திருப்பூர் அருகே பிடிபட்டுள்ளதாக அறிகிறோம்.

பணம் கொண்டு சென்ற கண்டெய்னர்கள்
பணம் கொண்டு சென்ற கண்டெய்னர்கள்

இந்தப் பணம் எஸ்பிஐக்கு சொந்தமானது என மத்திய அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார். ஆனாலும் ரூ. 570 கோடிக்கு உண்மையான உரிமையாளர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அண்மையில் கரூரில் அன்புநாதன் என்பவரின் வீட்டிலிருந்து பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
ஆகவே, இந்த விவகாரத்தில்  நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்” என்று டி.கே.எஸ். இளங்கோவன் குறிபிட்டிருந்தார்.
இந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த வாரம் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “திருப்பூரில் கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடி பணம் ஸ்டேட் வங்கியின் உள்ளக வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைகளில் ஒன்று. இந்த பிரச்சினையில் சர்வதேச தலையீடு எதுவும் கிடையாது. சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு இந்த வழக்கு ஒன்றும் பெரிய குற்றம் தொடர்பானதோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மீதானதோ இல்லை. ஆகவே இதில் சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை தீர்ப்பளித்த நீதிபதிகள் , திருப்பூர் அருகே ரூ.570 கோடி சிக்கியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தவிட்டனர்.
கைப்பற்ற பணம் ரூ. 570 கோடியும் தற்போது கோவையில் பாரத ஸ்டேட் வங்கி வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.