தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த இரவு கைது செய்யப்பட்டான்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தன் சொந்த கிராமமான மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்த அவனை காவல்துறையினர் பிடித்தனர். அப்போது ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான். இதனால் அவனுக்கு நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கழுத்தில் அவனுக்கு 18 தையல் போடப்பட்டுள்ளது. தற்போது அவன் இயல்பு நிலைக்கு வந்துள்ளான். இதனால் அவன் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டான்.
அதனை தொடர்ந்து நேற்று மதியம் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ், ராம்குமார் சிகிச்சை பெற்று வந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.
பிறகு ராம்குமாரை சென்னை கொண்டு செல்ல போலீசாருக்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து ராம்குமாரை சென்னை கொண்ட வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக 108 ஆம்புலன்சு வாகனம் ஒன்றில் டிரைவர் மற்றும் உதவியாளருடன் ராம்குமாருடன் செல்ல காது, மூக்கு, தொண்டை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரும் உடன் வந்தனர்.
சென்னையில் ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை சென்னை எழும்பூர் குற்றவியல் பெருநகர நீதிமன்றத்தில் ராம்குமாரை ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, ராயப்பேட்டை மருத்துவமனியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.