ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பது “கபாலி” ரிலீஸுக்குத்தான். படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடக்சன் பணிகள் எல்லாம் முழுமையாக முடிந்து தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அடுத்த (ஜூலை) மாதம் இரண்டாம் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், “கபாலி ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைத்தான் வாங்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் பொறுப்பு” என்று படத்தின் தயாரிப்பாளர் தாணுவுக்கு ரஜினி கட்டளையிட்டிருப்பதாக கோலிவுட்டில் மெல்ல மெல்ல தகவல் பரவி வருகிறது.
இது குறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
\“பொதுவாக ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ் ஆகும்போது முதல் இருபது நாட்கள் வரையில் அதிக கட்டணம் தியேட்டர்களில் வசூலிக்கப்படும். அதாவது அதிகபட்சம் 120 ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் இவர்கள் ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பார்கள்.
முன்பு, தியேட்டர்காரர்களிடம் இருந்து டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, அதிகவிலைக்கு லோக்கல் ரவுடிகள் விற்பார்கள். இது பிளாக் டிக்கெட் எனப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாக தியேட்டரிலேயே (கவுண்ட்டரில்) கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பது வழக்கமாகிவிட்டது.
இந்த வசூல் கணக்கையும் சேர்த்துத்தான் மாஸ் ஹீரோக்களுக்கு சம்பளம் நிர்ணியிக்கப்படுகிறது. அதே போல இதே கணக்கில்தான் விநியோகஸ்தர்களுக்கு படம் விற்கப்படுகிறது
ரஜினயின் “லிங்கா” படத்துக்கும் இப்படித்தான் நடந்தது. ஆனால் அந்த படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால், விநியோகஸ்தர்கள் நட்டப்பட்டார்கள். பிறகு பிரச்சினை செய்து ரஜினியிடம் குறிப்பிட்ட தொகையை வசூலித்துவிட்டார்கள். ஆனால் இன்னமும் பிரச்சினை நீடிக்கிறது.
ஆகவே ரஜினி, தற்போதைய “கபாலி” படத்தில் தெளிவாக முடிவெடுத்தார். அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் கபாலிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், எவ்வளவு வசூல் ஆகும் என்பதை தோராயமக கணக்கிட்டு, அதற்கேற்றாற்போலத்தான் தனது சம்பளத்தை நிர்ணயித்தார். அதவாது வழக்கத்தைவிட குறைவு.
அதே நேரம், படத்தை அதிக விலைக்கு விநியோகஸ்தர்களுக்கு விற்று, அவர்கள் லாபம் பார்க்க, தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் என்ன செய்வது என்று ரஜினி யோசித்தார். ஆகவே, “சரியான விலைக்கே விநியோகஸ்தர்களுக்குக் கொடுங்கள்” என்று ஏற்கெனவே படத்தயாரிப்பாளர் தாணுவிடம் சொல்லிவிட்டார். அதுபோலவே படம் விற்கப்பட்டதாக தாணுவும் ரஜினிக்கு உறுதி கொடுத்தார்.
இதற்கிடையே “கபாலி” பட ரீலீஸ் நெருங்கும் நிலையில், மீண்டும் கலைப்புலி தாணுவிடம், “கபாலி வெளியாகும் தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். இது உங்கள் பொறுப்பு” என்று கட்டளையாகவே ரஜினி சொல்லிவிட்டார்.
அதுமட்டுமல்ல.. “கபாலி” ரிலீஸ் சமயத்தில் ரசிகர்களுக்கு ரஜினி கடிதம் ஒன்றும் எழுதப்போகிறார். அதில், மேற்கண்ட விவரஙகள் இருக்காது. அதே நேரம், “அன்பான ரசிக கண்மணிகளே.. அதிக கட்டணம் கொடுதது ஏமாறாதீர்கள். தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வாங்கினால் புகார் செய்யுங்கள்” என்று அந்த கடிதத்தில் அறிவிப்பார்.” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
ரஜினியின் செயல்பாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அவர்கள், “நீண்டகாலத்துக்குப் பிறகு ரஜினி படத்தை உரிய தொகை மட்டுமே கொடுத்து ரசிகர்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு சில தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்மபளத்தை அளவுக்கு அதிகமாக ஏற்றிவிடுகிறார்கள். அது படச் செலவை அதிகரித்து, தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வாங்கினால்தான் கட்டுப்படியாகும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறது.
இது சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல.. அரசையும் ஏமாற்றுவதாக அமைந்துவிடுகிறது. சினிமாவை சூதாட்டமாக்கிவிடுகிறது. இந்த பிரச்சினைக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அவரது பாணியை மற்ற மாஸ் ஹீரோக்களும் பின்பற்றவேண்டும். அப்படி செய்தால் சினிமா தழைக்கும் “ என்கிறார்கள்.
“லிங்கா” வெளியானபோது, “தியேட்டர்களில் சட்டத்துக்குப் புறம்பாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், “குழு அமைத்து டிக்கெட் விலையை கண்காணிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டதும், அதன்படி குடழு அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்:
044- 2345 2359
- டி.வி.எஸ். சோமு