ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி கொடூரமாகக் கொல்லப்பட்டது தேசம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ரயில் நிலைய பாதுகாப்பு ஏற்படுகள் குறித்தும் நிறைய பேசப்படுகின்றன. குறிப்பாக ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா (சி.சி. டி.வி. கேமரா) இல்லாதது பற்றி பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன்பே, அப்போதைய ரயில்வே ஐ.ஜி. திலகவதி ஐ.பி.எஸ், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க ஏற்பாடுகளைச் செய்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டன. அதே போல பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்தவர் திலகவதி ஐ.பி.எஸ்.
அவரிடம் ரயில் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டோம்.
அவர், “உலகில் நாளுக்கு நாள் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. குற்றவாளிகளும் நவீனத்துக்கு மாறி வருகிறார்கள். இந்த நிலையில் காவல்துறை அதி நவீன யுக்திகளைப் பயன்படுத்தினால்தான் குற்றச் செயல்களைத் தடுக்க முடியும்.
ஆகவேதான் நான் ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த போது, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஆனால் ரயில்வே துறை மூலமாக இதை அமைக்க முடியவில்லை. அவர்களுக்கு இதில் பெரிய அக்கறை இல்லை. ஆகவே, தனியார் நிறுவனங்களை அணுக உதவி கேட்க நேரிட்டது.
முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற அதிகமானோர் வந்து செல்லும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதே போல நெல்லை, சேலம் போன்ற மாவட்ட தலைநகரங்களில் இருக்கும் நிலையங்கள் சிலவற்றிலும் பொருத்தப்பட்டது. எல்லாமே தனியார் நிறுவனங்களின் உதவியோடுதான்.
ரயில்வே ஐ.ஜி. பொறுப்பில் இருந்து நான் மாறிய பிறகு, அந்த கண்காணிப்பு கேமராக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும், பழுது ஏற்பட்டால் சரி செய்ய வேண்டும். அது எதுவுமே நடக்கவில்லை என்றால் என்ன செய்வது?
நீண்ட தூர ரயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும் என்று கூறினேன். ஆனால் அது செயலாக்கம் ஆகவில்லை.
தமிழ்நாடு காவல்துறையில் இருந்து ரயில்வே துறைக்கு காவலர்கள் அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.
நீண்டதூர ரயிலில் பாதுகாப்புக்கு காவலர்கள் செல்வார்கள். (மொபைல் போலீஸ்.) இவர்களுக்கு ம ரயிலில் படுக்கை வசதி இல்லாவிட்டாலும்.. குறைந்தபட்சம் இருக்கை வசதியாவது செய்து கொடுங்கள் என்று ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டேன்.
ஆனால் அப்போது ரயில்வே உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி, “மொபைல் போலீஸ் என்றால் நடமாடிக்கொண்டேதானே இருக்க வேண்டும்.. அவர்களுக்கு ஏன் இருக்கை வசதி” என்று கேட்டார்.
12 மணி நேரம் பயணிக்கும் போது, ஒரு மனிதர் நடந்துகொண்டே இருக்க முடியுமா? கொஞ்ச நேரமாவது அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருந்தால்தானே, உற்சாகமாக அவர் செயல்பட முடியும்?
இதெல்லாம் அந்த உயர் அதிகாரிக்குத் தெரியவில்ல.
அது மட்டுமல்ல.. நீண்ட தொலைவில் இருந்து காவலர் பணி முடிந்து சென்னை எழும்பூர் வந்தால், ஓய்வெடுக்க அறை கிடையாது.
ரயில் நிலையம் என்பது மிக சென்சிட்டிவான பகுதி. பல்வேறு நபர்கள் நடமாடும் இடம். சினிமா நட்சத்திரங்களைப் பார்க்க, வீட்டில் சித்தி கொடுமையிலிருந்து தப்பிக்க.. இப்படி பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு ஓடி வரும் சிறுவர் சிறுமியர் உண்டு. சென்னை சென்ட்ரலுக்கோ எக்மோருக்கே இவர்கள் வந்து எங்கே எப்படி போவது என்று தவித்து நிற்பார்கள். இப்படி வரும் சிறுவர் சிறுமியரை கடத்திச் செல்வே ஒரு கும்பல் அலைந்துகொண்டிருக்கும். அந்த சிறுவர்களிடம் நைச்சியமாக பேசி கடத்திச் சென்று விடுவார்கள். சிறுமிகளை விபச்சாத்தில் தள்ளிவிடுவார்கள். சிறுவர்களை பிச்சை எடுக்க பயன்படுத்துவார்கள்.
இந்தக் கொடுமையைத் தடுக்க எழும்பூர், சென்ட்ரல் நிலையங்களில் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு ஒரு பூத் வைக்க முடிவு செய்தேன். அந்த பூத்தில் தனியார் நிறுவன தொண்டர்கள் இருப்பார்கள். வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்களை பாதுகாத்து அவர்களது வீட்டுக்கோ, சேவை இல்லத்துக்கோ அனுப்புவார்கள்.
ஆனால், அந்த தன்னார்வ தொண்டர்களுக்காக ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு பூத் வைக்க ரயில்வே நிர்வாகம் இடம் கொடுக்கவில்லை.
நான் இந்தத் திட்டத்தை சொன்னவுடன், “பிளாட்பாரத்தில் இவ்வளவு இடம் கேட்கிறீர்கள். அந்த இடத்தை ஏதாவது கடைக்கு வாடகைக்கு விட்டால் இவ்வளவு வருமானம் வருமே” என்றார்கள்.
பிறகு அவர்களிடம் போராடி சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் நிலையங்களில் சிறுவர் பாதுகாப்புக்காக பூத்கள் அமைக்க ஏற்பாடு செய்தேன்.
நதிஷ்குமார், ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரிடம், “ரயில்வே துறை பாதுகாப்புக்கு என்று ஆர்.பி.எப். இருக்கிறது. அதில் அதிகமானவர்களை சேர்த்து அவர்களிடம் முழுமையாக ரயில்வே பாதுகாப்பை அளிக்கலாம். மாநில அரசிலிருந்து சில நூறு போலீசாரை பாதுகாப்புக்கு பயன்படுத்தத் தேவையிருக்காது” என்று சொன்னேன். அது நடக்கவில்லை” என்று திலகவதி ஐ.பி.எஸ்., இனி செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து பேசினார்:
“ரயில்வே காவல் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அந்த காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களிலும், தொலைதூர ரயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
இவற்றைச் செய்தாலே ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நடக்கும் குற்றங்கள் தடுக்கப்படும்” என்று சொல்லி முடித்தார் திலகவதி ஐ.பி.எஸ்.
ரயில்தவே ஐ.ஜி.யாக மட்டுமல்ல.. தமிழ்நாடு கவல்துரை டி.ஜி.பி.யாக இருந்தவர். மேலும், படைப்பாளி, பெண்ணுரிமை போராளி, சமூக ஆர்வலர், இதழாளர் என்று திலகவதிக்கு பன்முகங்கள் உண்டு என்பது தெரிந்த விசயம்.
அந்த வகையில், சுவாதி கொலை குறித்து மேலும் சில கருத்துக்கள நம்மிடம் பகிர்ந்துகொண்டார் திலகவதி ஐ.பி.எஸ். அவை… அடுத்த பகுதியில்
பேட்டி: டி.வி.எஸ். சோமு