பெங்களூரு விமான நிலையத்தில் இளையராஜா கொண்டு வந்த பிரசாத பை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் இருந்த குங்குமம், தேங்காய் உட்பட சில பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்த பொருட்கள் பற்றி இளையராஜா விளக்கம் சொல்லியும் அவர்கள் ஏற்கவில்லை. பிறகு நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு, அப் பொருட்களுடன் செல்ல இளையராஜாவை அதிகாரிகள் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இளையராஜா அவமானப்படுத்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். வேறு சிலர், இது வழக்கமான பரிசோதனைதான் இதில் அவமனாப்படுப்பதப்பட என்ன இருக்கிறது என்றும் எழுதினர்.
இதற்கிடையே, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், விமான நிலைய அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இசையமைப்பாளர் இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் ஆலய வழிபாட்டை முடித்து கொண்டு பிரசாத பொருட்களுடன் சென்னை வருவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கோவில் பிரசாத பொருட்களை அனுமதிக்காததுடன், இளையராஜாவின் விளக்கத்தையும் ஏற்காமல் ஒரு மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.
உலக புகழ்பெற்ற இசைஞானிக்கு இந்த சம்பவம் நடந்தது குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன். இதற்கு கண்டனமும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்” என்று வைகோ அறிக்கைவிட்டார்.
இந்த நிலையில், விமான நிலைய சம்பவத்தை ஒளிபரப்பிய “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சிக்கு இளையராஜா பட்டி அளித்துள்ளார். அதில், “நானே அந்த சோதனையை பெரிதாக எடுக்கவில்லை. ஊடகங்கள் ஏன் அதை பெரிதுபடுத்துகின்றன? பாதுகாவலர் அவர் கடமையைதான் செய்தார். இப்படிப்பட்ட பாதுகாவலர்கள் இல்லை என்றால் இந்தியாவே கிடையாது” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், “இதுபோன்ற தேவையற்ற விஷயத்தில் நமது நாட்டு மக்கள் தங்கள் கவனத்தையும், சக்தியையும் விரையம் செய்வது தேவையில்லாதது. இது ஒன்றுமே இல்லாத விஷயம்” என்றும் இளையராஜா கூறியுள்ளார்.
வெளிப்படையாக ஊடகங்களை மட்டும் குறை சொல்லியிருந்தாலும் அவருக்காக குரல் கொடுத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் தர்மசங்கடப்படுத்துவதாக இளையராஜாவின் கருத்து இருக்கிறது என்பதும் உண்மையே.
ஏனென்றால் ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்தான் ஊடகத்தில் வெளியானது. ஆனால் வைகோதான், “முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்” என்று ஆவேசமாக அறிக்கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.