சென்னை:
‘பள்ளி மாணவர்களுக்கு புதிய, பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டு பஸ் பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என, போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருக்கிறார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில்,  அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:
“அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் வருவாயை உயர்த்த  பேருந்துகளை  சிறப்பாக பராமரிக்க வேண்டும். தினமும் சரியான நேரத்தில், பயணிகள் தேவைக்கேற்ப பேருந்துகளை  இயக்க வேண்டும்.
freebuspass_1452014
நடப்பு, 2016 – 17ம் ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ், மாணவர்களுக்கு  விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டுக்கான இலவச பஸ் பாசை பயன்படுத்தி, மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். அனைத்து பேருந்துகளும் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பின், பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்.
சிக்கனமற்ற வழித்தடங்களை ஆய்வு செய்து, பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில்,
சீரமைப்பு செய்ய வேண்டும். பின், தேவைப்படும் நேரங்களில், தேவைப்படும் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
ஓட்டுநர்களிடம் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருமானத்தை அதிகரிக்க, விளம்பரம், பார்சல் சர்வீஸ் உட்பட, நவீன வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்”

  • இவ்வாறு அமைச்சர் பேசினார்.