சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தமாகா தலைவர் ஜிகே வாசனும் கூட்டணியில் இருந்து போனால் போகட்டும் என வைகோ பேசியதாக வந்த செய்தியை அவர் மறுத்து இருக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக, தமாகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  அடுத்து தாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்று பிரச்சாரம் செய்த இந்த அணி, விஜயகாந்தை முதல்வேட்பாளராக முன்னிறுத்தியது.  ஆனால் தேர்தலில் இந்த அணி படுதோல்வி அடைந்தது. விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.
இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்வது குறித்து தேமுதிக, தமாகா கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.   இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, “விஜயகாந்தும் வாசனும் கூட்டணியைவிட்டு போனால் போகட்டும்; அவர்களை யார் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்கள்”  என தனது கட்சி மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அப்படி தான் பேசவே இல்லை என வைகோ மறுத்துள்ளார். இது தொடர்பாக வைகோ கூறியுள்ளதாவது: “தேர்தல் காலங்களில் திமுகவினர் என் மீது இதுபோன்ற நச்சுக்கணைகளை ஏவுவது வழக்கம். எனவே, ஆரம்பத்தில் இந்த சர்ச்சை குறித்து பதில் சொல்லாமல் தவிர்த்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் இந்த விஷயம் பூதாகரமாகி வருகிறது. ஆகையால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது, நான் என்ன பேசினேன் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

வைகோ - விஜயகாந்த்
வைகோ – விஜயகாந்த்

அந்தக் கூட்டத்தில், பெரும்பாலானோர் தேமுதிக – ம.ந.கூட்டணி – தமாகா அணியை உருவாக்கி வழிநடத்திச் சென்றதற்காக என்னை பாராட்டினர். நான் பேசியபோது, கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி மதுரையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நானும் விஜயகாந்தும் ஒன்றாக வந்தோம். அவர் பேசியதிலிருந்து அவரது மனநிலை திமுக, அதிமுகவுக்கு எதிராக உள்ளதை சூசகமாக உணர்ந்து கொண்டேன்.
பிறகு ம.ந.கூட்டணியில் உள்ள நான்கு  கட்சிகளும் பேசி, தேமுதிக, தமாகா வந்தால் கூட்டணி வலுப்பெறும் என்று முடிவெடுத்தோம். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக 3 முறை விஜயகாந்துடனும், பிரேமலதாவுடனும் பேசினேன்.
அந்த நேரத்தில் தே.மு.தி.கவை கூட்டணியில் இணைப்பதற்காக பாஜக பல அழுத்தங்களை தந்தது. திமுக தரப்பில் 80 தொகுதி மற்றும் பெரும் தொகை என்று சிலர் முயற்சித்தனர். அந்த செய்தியை கொண்டு வந்த நபரைக்கூட விஜயகாந்த் சந்திக்கவில்லை. அவற்றையெல்லாம் புறக்கணித் துவிட்டு எங்களுடன் கூட்டணி சேர்ந்தார். சொன்ன சொல்படி உறுதியான நேர்மையுடன் நடக்கும் விஜயகாந்தின் நடவடிக்கைகளைக் கண்டு அவர் மீதான மதிப்பு ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல, தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் கூட்டணி பேச்சு வார்த்தைகளின்போது மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். நாங்கள் கேட்ட பல தொகுதிகளை விட்டுக் கொடுத்தார்.  அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். எனவே, ஜி.கே.வாசன் மீதும் எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றுதான் பேசினேன்.
ஆனால், என் மீது களங்கத்தை ஏற்படுத்தவே, விஜயகாந்தும் வாசனும் போனால் போகட்டும் என்று நான் கூறியதாக திமுக திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறது. அப்படி நான் பேசவில்லை. தேமுதிக – ம.ந.கூட்டணி – தமாகா அணி மேலும் வலுப்பெறும்” என்று வைகோ விளக்கம் அளித்துள்ளார்.