அ.தி.மு.க.வின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் போது, அக் கட்சிக்கு மிக அணுக்கமாக இருந்தவர்களில் முக்கியமானவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்திக்கும் அளவுக்கு, அவரது குட் புக்கில் இடம் பிடித்தவர். இவரது கட்சிக்கு, அ.தி.மு.க.கூட்டணியில் கணிசமான இடம் ஒதுக்கப்படும் என்ற பேச்சும் இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இவரது கட்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் இடமில்லை என்றானது. இதனால் வெகுண்ட வேல்முருகன், தனது வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும் என்றார். இந்த முடிவை எதிர்த்த தனது கட்சி நிர்வாகிகள் சிலரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கினார்.
சொன்னது போலவே, தனித்தும் நின்றார். நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்களை பெற்றார். மற்ற தொகுதியில் நின்ற இவரது கட்சி வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு பெறவில்லை.
இந்த நிலையில், மீண்டும் முதல்வராi பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் வேல் முருகன்.
“கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தின் வாழ்வுரிமைக்காக, தமிழர் நலனுக்காக நல்லாட்சியை வழங்கியதற்காகவே தமிழக மக்கள் மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதாவை அரியாசனத்தில் அமர வைத்துள்ளனர். இனி வரும் 5 ஆண்டுகாலமும் அதேபோல் தமிழகத்தின், தமிழினத்தின் உரிமைகளை பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் அவரது பயணம் தொடர வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் பெரும் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும். தமிழினத்தின் நலனுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றென்றும் உறுதுணையாக இருக்கும். பெரும் வெற்றி சரித்திரம் படைத்து 6-வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் ஜெயலலிதாவிற்கு மீண்டும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் வேல்முருகன்.
இந்த நிலையில் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்..
மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவை பாராட்டியிருக்கிறீர்களே..
ஆமாம்… காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது, 7 தமிழர் விடுதலைக்கான உறுதியான நடவடிக்கைகள், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த தீர்மானம் என்று தமிழினத்தின் நலன் சார்ந்து அர்ப்பணிப்புடன் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டுள்ளார். அதற்காகவே மீண்டும் அவரை அரியணையில் அமரவைத்துள்ளனர். அதற்காக பாராட்டு தெரிவிப்பதுதானே நாகரீகம்..?
நிர்வாக சீர்கேடு, ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்று கடந்த அ.தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனங்கள் இருந்தனவே?
அதெல்லாம் எதிர்க்கட்சிகள் செய்த பொய்ப்பரப்புரை. மிகச் சிறந்த நிர்வாகத்தை முதல்வர் அவர்கள் கொடுத்தார்கள். லஞ்ச ஊழலுக்கு வழியின்றி நேர்மையான ஆட்சியை அளித்தார்கள். அதன் விளைவுதான் பெரும் சாதனையாக மீண்டும் முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் வழக்கத்தைவிட அதிகமாக பணம் புழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளனவே..
இதுவும் தோற்றவர்களின்.. எதிர்க்கட்சிகளின் ஆதங்கம். மற்றபடி இதில் உண்மையில்லை.
இத்தனை சிறப்பான ஆட்சி அளித்த அவருக்கு.. அதாவது அ.தி.முக.வுக்கு எதிராக உங்கள் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்டது ஏன்?
முதல்வர் அவர்களுக்கு எதிராக நாங்கள் போட்டியிடவில்லை. அ.தி.மு.க. அணியில் உரிய தொகுதிகள் ஒ துக்கப்படாத நிலையில், எங்கள் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் போட்டியிட வேண்டியதாகிவிட்டது. இதுதான் அரசியலில் சரி.
சிறந்த ஆட்சி கொடுத்தாலும், உங்களுக்கு ஒரு சீட் ஒதுக்கவில்லை என்பதற்காக தனியாக போட்டியிட்டீர்கள். அப்படித்தானே..
இல்லையில்லை. அம்மா அவர்கள் எனக்கு சீட் தருவதாகத்தான் சொன்னார். ஆனால் எனது கட்சிக்காரர்கள் சிலருக்கும் வாய்ப்பு வேண்டியிருந்த நிலையில், அதற்கான சூழல் இல்லை என்கிறபோது, தனித்து நின்றோம். அவ்வளவுதான்.
தனித்து நின்று போட்டியிட்டும், இப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி இருக்கிறீர்கள். ஏன் என்று சொல்ல முடியுமா?
சிறப்பாக செயல்பட்டதால் வாழ்த்துகிறோம். தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என்பதால் ஆதரிக்கிறோம்.
அதாவது..
குறுக்கிட்டு) மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளைப்போலவே, அடுத்துவரும் ஐந்தாண்டிலும் அம்மா அவர்கள் சிறப்பாக செயல்பட்டு, மக்களின் பேராதரவைப் பெறுவார்கள். அவர்களது மக்கள் நலப்பணிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். நன்றி.