VASAN AMERI

சென்னை: 

“காங்கிரஸை குறை சொல்வதன் மூலம் தன் மீது தானே சேற்றை வீசிக்கொள்கிறார் ஜி.கே. வாசன்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஜி.கே.வாசன். சில நாட்களுக்கு முன், “காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு கர்நாடக, கேரள மாநில காங்கிரஸும், பாஜகவும்தான் காரணம்”  என்று தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி முற்றிலும் பலம் இழந்துவிட்டதாகவும் தெரிவித்து வருகிறார்.

ஜி.கே. வாசன் கருத்து குறித்து, காங்கரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ungalpathrikai.com  இதழுக்கு  தனி பேட்டி அளித்தார். இவர், ஜி.கே.வாசனுடன் த.மா.காவில் தலைமை நிலைய செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப நாட்களாக மீண்டும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறாரே ஜி.கே.வாசன்?

காங்கிஸ் கட்சியில் இத்தனை வருடங்கள் இருந்து, மத்திய மந்திரி பதவியை அனுபவித்துவிட்டு இப்போது குறை சொல்கிறார். இப்படி குறை சொல்வது என்பது, அவர் மீது அவரே சேற்றை வாரி வீசிக்காள்வது போலத்தான். இதை வாசன் உணர வேண்டும்.

காங்கிரஸை  இப்போது குறை சொல்லும் இவர், பத்து ஆண்டுகள் முக்கிய துறையின் அமைச்சராக இருந்தாரே.. அப்போது அந்த குறைகளை சரி செய்திருக்கலாமே!

காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளுக்கு கர்நநாடக, கேரள மாநில காங்கிரஸ் கட்சியும், பாஜகவும்தான் காரணம் என்று சொல்லியிருக்கிறாரே..!

அதான் சொன்னேனே.. அவர் தன் மீதே சேற்றை வாரி வீசிக்கொள்கிறார்.  த.மா.காவை நடத்த முடியாத நிலையில் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால்தான் பதவி கிடைக்கும் என்பதற்காக சேர்ந்தார். பதவி சுகம் அனுபவித்த பிறகு திரும்ப போய்விட்டார். அவர் அப்படித்தானே பேசுவார்?

கட்சி நடத்த முடியாமல்தான் காங்கிரசில் இணைந்தாரா?

ஆமாம்.. அப்போது அவருடன் த.மா.காவில் தலைமை நிலைய செயலாளராக இருந்த எனக்கு முழு உண்மை தெரியும். தனியாக கட்சி நடத்தும் தைரியமோ பணமோ அவரிடம் அப்போது இல்லை.  காங்கிரஸுக்கு வந்து பத்து வருட காலம் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பிறகு தைரியமும் பணமும் வந்துவிட்டது போலும். அதான் மீண்டும் தனிக்கட்சி துவங்கிவிட்டார்.

அப்படியானால் கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது வாசன் ஊழல் செய்து பணம் சம்பாதித்தார் என்கிறீர்களா?

எனக்குத் தெரியாது. ஆனால் ஜி.கே.வாசன் மீது, அரவிந்த் கெஜ்ரிவால்கூட குற்றம் சுமத்தினார். அது உண்மைதானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

சரி.. 2002ல் காங்கிரஸ் கட்சியுடன் த.மா.காவை இணைக்கும் போது நிலவிய சூழல் என்ன?

அப்போது கட்சி கரைந்துகொண்டே வந்தது என்பதுதான் உண்மை. கட்சி இணைப்பு விழாவில் த.மா.காவினரோடு, அப்போது தலைமைப்பொறுப்பில் இருந்த  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக கணிசமான காங்கிரஸாரும் கலந்துகொண்டார்கள்.  அந்த காலகட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி பெரிய காங்கிரஸுக்கு பெரிய ஃபோர்ஸ் ஆக இருந்தார். அவரும் பெரும் அளவில் காங்கிரஸ் தொண்டர்களை திரட்டி வந்தார்.

சுருக்கமாகச் சொன்னால், கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து பறந்து போயிடுத்து என்று ஒரு படத்தில் வசனம் வருமே… அப்படித்தான் ஜி.கே.வாசன் போய்விட்டார்..  ஆனால் பாவம் தனி ஆளாக நிற்கிறார்! வேறொன்றும் சொல்வதற்கில்லை!