“தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா?” என்று பதைபதைத்து நிற்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும்….
“தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா” என்று பதைபதைத்து நிற்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும்.
இது குறித்து விரிவாக அறிய தொல்லியல் துறை அறிஞர் ஜே.ஆர். சிவராமகிருஷ்ணனை சந்தித்து பேசினோம். அவர் தனது ஆதங்கத்தைக் கொட்ட ஆரம்பித்தார்:
“சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியின் தென்கரையில் உள்ளது கீழடி கிராமம். மதுரைக்கு கிழக்கே சுமார் 20 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இங்கே, . இங்கு கடந்த ஆறு மாதங்களாக இந்திய தொல்லியல் துறையின் பெங்களுரு மண்டலம் சார்பில் மிகப்பெரிய அகழாய்வு நடைபெற்று வருகிறது .
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பொருட்களும் இந்த கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. குறிப்பாக சிலப்பதிகரம் , பரிபாடல் , மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பொருட்களான கல்மணிகள் மட்டும் சுமார் 600 கிடைதுள்ளன. இவை தவிர முத்துமணிகள் , பெண்கள் பயன்படுத்திய கொண்டை ஊசிகள் , நூல் நுற்க பயன்படுத்தப்பட்ட தக்களி , பெண்கள் விளையாட பயன்படுத்திய சில்லு கருவிகள் , தாயக்கட்டை , சதுரங்க விளையாட்டுக்கு பயன் படுத்தப்பட்ட சுடுமண் காய்கள் , குஜராத்தை சார்ந்த சூது பவளம் மணிகள், சிறுவர்கள் குழந்தைகள் விளையாடப் பயன் படுத்திய சுடுமண் பொம்மைகள் போன்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. சங்க இலக்கியமான பட்டினப்பாலை குறிப்பிடும் சுடுமண் உறைகேணிகள் இப்பகுதியில் கிடைத்துள்ளது குறிபிடத்தக்கதாகும். இவைகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இவ்வுறைகேணிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டடப் பகுதிகள்
இப்படி அதிக அளவிலான செங்கற் கட்டடங்கள் வேறு எந்த அகழாய்விலும் கண்டறியப்படவில்லை. இக்கட்டட அமைப்புகளின் மூலம் பண்டைய கால தமிழர்களின் உன்னத கட்டுமான தொழில்நுட்பத்தை காணமுடிகிறது. மேலும் கட்டடங்களின் மீது வேயப்படிருந்த கூறைஓடுகள் அதிக அளவு கிடைத்துள்ளது. தரை தளங்கள் ஒவ்வொன்றும் சுட்ட செங்கற்களைக் கொண்டு பாவப்படுள்ளன. மேலும் வீடுகள் தோறும் குளியல்அறை இருந்துள்ளதற்கான தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பகுதியில் இருந்து சுமார் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு நிற மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. வீடுகளில் இருந்து கழிவு நீர்களை வெளியேற்றுவதற்காக செங்கற்கலாளான கழிவுநீர் கால்வாய்களின் அமைப்புகள் இங்குகண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் காலத்தால் முந்தையதான சிந்து சமவெளி நாகரிக பகுதியில் தான் இதுவரை அதிக அளவிலான கட்டடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் கீழடி அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ள பண்டைய கால தமிழர்களின் கட்டுமானங்களை பார்க்கும் போது சிந்துசமவெளி மக்களைப் போன்றே மாற்று வரிசையில் செங்கற்களை அடுக்கி கட்டடங்களை வலிமையாக கட்டும் தொழில் நுட்பம் அறிந்திருந்தனர் என்பதை அறியமுடிகிறது.
தமிழ் பிராமி எழுத்துக்கள்
இந்த அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் மட்கல ஓடுகளில் கீறல் குறீடுகளும் அதிக எணிக்கையில் கிடைத்துள்ளன. அதாவது அகழாய்வு குழிகளில் கீழ் மண்ணடுக்குகளில் குறீடுகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைக்கின்றன. மேல் மண்ணடுக்குகளில் தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைக்கப்படுவதால் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களில் கல்வி திறன் பற்றி அறியமுடிவதோடு தமிழ் மொழியின் வளர்ச்சியையும் இங்கு காணமுடிவது அரிதான தகவல். அதாவது கீழ் மண்ணடுக்கானது காலத்தால் முந்தையது இவ்வடுக்குகளில் தான் குறீடுகள் பொறிக்கப்பட பானையோடுகள் கிடைக்கின்றன. மேலடுக்கு காலத்தால் பிந்தியது இவ்வடுக்குகளில் தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகள் கிடைத்துள்ளன. தமிழ் எழுத்து என்பது குறீடுகள்களில் இருந்துதான் வளர்ச்சியுற்றது என்று பல வரலாற்றாளர்களின் கருதுகோளாகும். மேலும் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் மதுரை பகுதியில் தான் கிடைத்துள்ளன. எனவே தமிழ் மொழியின் பிறப்பிடம் மதுரை பகுதியாக இருக்கலாம் என்பது மொழியில் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக இந்த அகழாய்வு விளங்குவது குறிபிடத்தக்கதாகும்.
கிரேக்க மற்றும் ரோமானியர்களுடன் வணிக உறவு
மேலும் மதுரை கிரேக்க , ரோமனியர்களோடு வணிக உறவு கொண்டிருந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது . மதுரையை ஒட்டியுள்ள கீழடி அகழாய்வில் ரோமானியர்களின் மட்கல ஓடுகள் குறிப்பாக அரிட்டைன் வகை மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. இம்மட்கலன்கள் இத்தாலியில் வனையப்பட்டதாகவும். அம்பராவகை மட்கல ஓடுகளும் கிடைக்கப்படுவதால் கீழடியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கிரேக்க மற்றும் ரோமானியர்களுடன் வணிக உறவு வைத்திருக்காலம் என்பதை அறியமுடிகிறது. மேலும் ரௌலட்டட் வகை மட்கலங்களின் ஓடுகளும் இங்கு கிடைத்துள்ளது.
தானியங்களை சேமிக்கும் மட்கலன்கள்
தானியங்களை பெரிய அளவிலான மட்பாண்டங்களில் வைத்து நிலத்திற்கு அடியில் புதைத்து சேமிக்கும் வழக்கம் பண்டையகால தமிழர்களிடம் இருந்துள்ளது . எனவேதான் இந்த அகழாய்வுகளிலும் தானியங்களை சேமிக்கும் மூடிகளுடன் கூடிய பெரிய மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. மேலும் இவைகள் வீட்டின் அருகேயே வைத்து தானியங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. மேலும் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அத்தனை சான்றுகளும் உண்மை என்பதை பறைசாற்றும் வண்ணம் இந்த அகழாய்வு அமைந்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் நடைபெற்றுள்ள அகழ்வராய்ச்சிகளில் இதுதான் மிகப்பெரியது. . இங்கு 40 திற்கும் மேற்பட்ட அகழாய்வு பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு மிக விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தொல்லியல் துறையின் பெங்களுரு மண்டல இயக்குநர் திரு அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.
சங்ககாலத்தை சார்ந்த தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் நிறைய கிடைத்துள்ளன. இது தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இதுவரை பண்டைய கால தமிழர்களின் இடுகாட்டுப் பகுதியில் மட்டுமே பெரிய அளவில் அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
கொடுமணல் அகழாய்விற்கு பிறகு இந்த கீழடியில்தான் மக்கள் வாழிட பகுதியில் பெரும்பரப்பில் அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளது
திறந்தவெளி அருங்காட்சியகம்
இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களைக் கொண்டு பூம்புகார் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளில் உள்ளதைப் போன்று கீழடி அகழாய்வில்கிடைக்கப்பட்டுள்ள அதனை தொல் பொருட்களையும் கொண்டு இதே பகுதியில் ஒரு அருங்காட்சியகமும், அகழாய்வு குழிகளை துற்காமல் எகிப்து , சீன , ஜோர்டான் போன்ற நாடுகள் தங்களது நாடுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் மூலம் வெளிக் கொண்டுவரப்பட்ட அத்தனை இடங்களையும் திறந்தவெளி அருங்காட்சியகமாக பாதுகாத்து வருவதோடு , வெளிநாட்டு சுற்றுலாவை ஊக்குவித்து வருகின்றனர். இதே போன்று கீழடி பகுதிலும் அருங்காட்சியகமும் , அகழாய்வு குழிகளை பாதுகாப்புடன் கூடிய திறந்தவெளி அருங்காட்சியகமாக உருவாக்கினால் வரும் தலைமுறையினருக்கு நமது பண்பாடு , கலாசாரம் போன்றவற்றின் பெருமைகளை அறிந்து கொள்வதற்கு எதுவாக இருக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என்றார் சிவராமகிருஷ்ணன்.
ஆனால், அகழாய்வு நடத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அனைத்தும் வரும் இருபதாம் தேதி மூடப்பட இருக்கின்றன. இங்கு கிடைத்த அரிய தொண்மையான பொருட்களும் டில்லிக்கு கொண்டுபோகப்படுகின்றன. மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, இதைத் தடுக்க வேண்டும். கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் உருவாக்கி, இங்கு கிடைத்த பொருட்களை இங்கேயே மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும். அப்போதுதான் தமிழரின் பாரம்பரியத்தை தமிழர்கள் உணர வாய்ப்பாக இருக்கும். இதற்க்காக தமிழக அரசியல் தலைவர்களும் குரல்கொடுக்க வேண்டும்!” என்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும் தமிழார்வலர்களும்.