slide
பாஜகவுக்கு இன்று இரட்டை இடி. விஜயகாந்த், ம.ந.கூவுடன் கூட்டணி என்று அறிவித்தது  பெரிய இடி என்றால், சரத்குமார், “மனம் திருந்திய மைந்தனாக” அதிமுக “அம்மா”வை சந்தித்தது சின்ன இடி.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் தேசிய கூட்டணியில் இருந்த எந்த கட்சியும் இப்போது அதனுடன் இல்லை. இடையில் வந்த சரத்குமாரும் இடையிலேயே போய்விட்டார்.
பாஜகவின் இந்த பரிதாபத்துக்கு காரணம் என்ன?
தன் கூட்டணி கட்சியாக இருந்து பிரிந்தவர் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்பதால் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரனை தொடர்புகொண்டோம்.
விரிவாகவே பேசினார் ஈஸ்வரன்:
“இன்றைக்கு கூட்டணிக்கு எந்த கட்சியும் இல்லாமல் தனித்து விடப்பட்டு பரிதாப நிலையில் பாஜக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தமிழக பாஜக தலைவர்கள்தான்.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலா் என்.டி.ஏ. கூட்டணி என்று போட்டியிட்டோம். ஆனால் வெற்றி பெற்று மத்தியில் அதிகாரத்தில் உட்கராந்தவுடன், என். டி.ஏ. என்பதை தமிழக பாஜகவினர் மறந்துவிட்டார்கள்.
ஒரு முறைகூட, என்.டி.ஏ. ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தவில்லை.   ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும், மாவட்ட வாரியாக  என்.டி.ஏ. கூட்டம் போட்டு, அந்த பகுதி மக்களின் கோரிக்கைகள் என்ன என்று  கருத்து கேட்டிருக்கலாம். அதை மத்திய நிதி அமைச்சரிடம் தெரிவித்து தகுந்த அறிவிப்பு வெளிவரச் செய்திருக்கலாம்.
நதி நீர் இணைப்பு என்று ஓட்டு கேட்டோம்.  ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கான செயல்பாடு ஏதும் இல்லை.
அதே போல மேற்கு மாவட்டத்தில் விவசாயிகளை அழிக்கும் கெயில் திட்டத்தை  பாஜக அரசு நினைத்தால் தடுத்திருக்கலாம். அதை செய்யவில்லை.
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மக்கள் கொதித்தெழுந்ததும் நாங்களும் ஆதரிக்கிறோம் என்றார்கள் பாஜக தலைவர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாக என்ன கிழித்துக்கொண்டிருந்தார்கள்?
இப்படி என்.டி.ஏ. என்ற பெயரில் வென்று எதையுமே செய்யவில்லை. பிரச்சினைகள் குறித்து கூட்டணி கட்சிகளோடு ஆலோசனை செய்யவில்லை. இப்படி இருந்தால் கூட்டணி கட்டிகள் எப்படி பாஜகவை மதிக்கும்.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தின் போது, நாங்களும் நிவாரண பணிகள் செய்தோம், பாஜகவினரும் செய்தார்கள். ஆனால் இணந்து என்.டி.ஏ. பெயரில் செய்யவில்லை.
இதையெல்லாம் தமிழக பாஜக தலைவர்களிடம் சொல்லி அலுத்துவிட்டேன்.  கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு என்.டி.ஏ. கூட்டணி என்றவர்கள், அதன் பிறகு பாஜகவாகத்தான் செயல்பட்டார்கள். இப்போது சட்டமன்றத் தேர்தல் வந்த பிறகு மறுபடி என்.டி.ஏ., என் டி.ஏ. என்று குதிக்கிறார்கள். இதை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்?
என்.டி.ஏ.வில் இருந்து நாங்கள் உட்பட, மற்ற கூட்டணி கட்சிகள் விலகியதற்குக் காரணம் தமிழக பாஜக தலைவர்கள்தான்”  என்ற ஈஸ்வரனிடம்,   ம.ந.கூட்டணியோடு விஜயகாந்த் கூட்டணி  ஏற்படுத்தி இருப்பதைப் பற்றிக் கேட்டோம்.
அதற்கு அவர், “மக்கள் நலக்கூட்டணியில் நான்கு கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை ஓட்டுக்கள் விழுமோ அதைவிட குறைவாகத்தான் அந்த கூட்டணிக்கு கிடைக்கும். ஏனென்றால் அங்கே நான்கு தலைவர்கள் இணைந்திருக்கிறார்கள். ஆனால் அக் கட்சி தொண்டர்கள் மனதார இணையவில்லை.
இந்த நிலையில் விஜயகாந்த் அங்கு போய் சேர்ந்திருக்கிறார். இது அந்த கூட்டணிக்கு இழப்பையே தரும்.
ஏனென்றால் ஏற்கெனவே மக்கள் நலக்கூட்டணிக்கு கட்சி சாராத பொதுமக்கள் சிலர் ஆதரவு மனோபாவத்தில் இருந்தார்கள். அவர்கள் விஜயகாந்தை, அவரது  அதிரடி செயல்பாடுகளை ஏற்காதவர்கள். ஆகவே இப்போது மக்கள் நலக்கூட்டணியோடு விஜயகாந்த் கூட்டணி வைத்திருப்பதால் அந்த வாக்களர்கள் வேறு சாய்ஸைத்தான் தேடுவார்கள்.
மேலும் ம.தி.மு.கவினர், தங்களது தலைவர் வைகோவைத்தான் முதல்வர் வேட்பாளர் என்று நினைப்பார்கள். இப்போது விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை வைகோ ஏற்கலாம். அவரது தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். ஆகவே அக்கூட்டணிக்கு ம.தி.மு.க. ஓட்டுக்கள் முழுமையாக கிடைக்காது.
எல்லாவற்றுக்கும் மேல், தோற்கிற கட்சிக்கு ஓட்டுப்போட்டு வீணாக்க வேண்டும் என பொதுமக்களில் பலர் நினைக்கிறார்கள். ம.ந.கூ – தே.மு.தி.க. கூட்டணியை அப்படித்தான் மக்கள் பார்க்கிறார்கள். ஆகவே இந்த கூட்டணி வெற்றி பெறாது!” என்றார்.
ஆனால் இன்று மதியத்தில் இருந்து, “ம.ந.கூட்டணியோடு உங்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று தகவல்கள் பரவிவருகிறது. அது குறித்து கேட்டபோது, ” அது பொய்யான தகவல்.   இன்னும் பத்து நாட்களில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என்றார்.