எல் நினோ (El Nino) வானிலை நிகழ்வு மீண்டும் உருவாகி வருவதால், உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ நிகழ்வாகும். இது பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவும் என்றும், எல் நினோ தாக்கம் நவம்பர் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் WMO தெரிவித்துள்ளது.

இதுகுறித்து WMO பொதுச் செயலாளர் செலஸ்டே சவுலோ கூறுகையில், “வலுவான எல் நினோ நிகழ்வுக்குத் தயாராக இருக்க வேண்டும். இது வறட்சி, கனமழை, நிலப்பரப்பு மற்றும் கடல்பகுதிகளில் வெப்ப அலைகளை அதிகரிக்கக்கூடும்” என்றார்.
எல் நினோ காரணமாக தென் அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் மத்திய ஆசியாவில் அதிக மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவின் சில பகுதிகளில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள், கொசு மூலம் பரவும் நோய்களின் பரவல், உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வால் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பமான ஆண்டாக 2024ம் ஆண்டு மாறியதாக WMO தெரிவித்துள்ளது.
உலகம் இதை அவசர காலநிலை எச்சரிக்கையாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]