ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
ஈரானின் கோருக் மற்றும் கெஷ்ம் தீவுகளில் உள்ள ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் MQ-1 ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் இரண்டு தாக்குதல் ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா சிரிக் தீவில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தை தாக்க பயன்படுத்திய விமான தளத்தை தங்களது விண்வெளிப் படை குறிவைத்து தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. ஆனால் அந்த விமான தளம் எங்கு உள்ளது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.
குவைத்தில் ஏவுகணை, ட்ரோன் அச்சுறுத்தல்
இதனிடையே, குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஈரான் அல்லது ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் இதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்னும் உறுதி இல்லை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்த வரைவு குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இந்த வரைவு ஒப்பந்தத்தில் 60 நாட்கள் போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் எந்த சூழலிலும் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதே முக்கிய நிபந்தனை” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க அவசரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மறுபுறம், தங்களது உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்; அதற்கான உறுதிமொழிகள் இல்லாத எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என்று ஈரான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இதனால், அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
[youtube-feed feed=1]