தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே நடைபெற்ற பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில்,  குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திக்குளம் வேடநத்தம் பகுதியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் 20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த 77வது நாளான இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் 12ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என உறுதியான நிலையில், அவருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி மாலை வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது காணாமல் போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் உடனடியாக குளத்தூர் காவல் நிலையத்துக்கு புகாரளிக்க சென்றுள்ளனர். ஆனால் அவர்களை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்திய நிலையில், அங்கு சென்றுள்ளனர். ஆனால் அடுத்த நாள் அவர்களை வரச்சொல்லி போலீசார் திருப்பி அனுப்பியதால், மறுநாள் காலை மீண்டும் சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பிரவீனா, புகாரை வாங்காமல் அலைகழித்து பல மணிநேரம் காக்க வைத்து மீண்டும் குளத்தூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் அங்கு வந்த சமயத்தில், காணாமல் போன மாணவி, அருகிலுள்ள காட்டுப்பகுதியில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலானது தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து அலட்சியப்போக்குடன் நடந்துகொண்ட இன்ஸ்பெக்டர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை சடலத்தை பெறமாட்டோம் என மாணவியின் குடும்பத்தாரும் ஊர் மக்களும் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் காற்றாலை கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து மே 19ஆம் தேதி சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை அடுத்து மாணவியின் சடலத்தை அவரது குடும்பத்தார் பெற்று தகனம் செய்தனர்.

தர்ம முனீஸ்வரன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. 20 நாட்களில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 3 முறை தர்ம முனீஸ்வரன் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தவிர, இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்றம் கூடியவுடன், தர்ம முனீஸ்வரன் மீதான கொடூரக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரைப் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா அதிகாரப்பூர்வமாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரனுக்கான இறுதித் தண்டனை தீர்ப்பை இன்று பகல் 1.00 மணிக்கு நீதிபதி பிரீத்தா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில், தர்ம முனீஸ்வரனுக்கு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கொலை செய்த வழக்குக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸிங்கர் ஆஜராகி வாதாடினார்.

தர்ம முனீஸ்வரன் ஏற்கெனவே ஒரு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இந்நிலையில், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

[youtube-feed feed=1]