சென்னை: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14.22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2.044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28/11/2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி முழுமையாக ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01/05/2025 முதல் 28/02/2026 வரை பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூபாய் 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூபாய் 50,000 முதல் ரூபாய் 60,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 40,000 தள்ளுபடியும், ரூபாய் 60,000 முதல் ரூபாய் 70,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 30,000 தள்ளுபடியும், ரூபாய் 70,000 முதல் ரூபாய் 80,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 20,000 தள்ளுபடியும், ரூபாய் 80,000 முதல் ரூபாய் 90,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 தள்ளுபடியும், ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 5,000 தள்ளுபடியும் செய்யப்படுகிறது.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூபாய் 5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01/05/2025 முதல் 28/02/2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்”

இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]