இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கூறப்பட்டுள்ள ரூ.2 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், கடந்த 2005-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறை செயலாளராகப் பணியாற்றினார். அப்போது, ரூ.215 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் மலேசியாவின் பதிபெல் நிறுவனமும், கேரளாவின் பகீரதா இன்ஜினியரிங் நிறுவனமும் இணைந்து ஒப்பந்தம் எடுத்திருந்தன.

திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடிக்காததால், ஒப்பந்தத் தொகையில் ரூ.17 கோடியை அரசு நிறுத்தி வைத்தது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்தத் தொகையை விடுவிக்க மலேசிய நிறுவனத்தின் பொறியாளர் லீ சி பென்னிடம் ஞானேஷ் குமார் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது.
இதனால் மனமுடைந்த லீ சி பென் மலேசியா திரும்பிய நிலையில், அங்கு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அப்போது குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோதும், பின்னர் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், இந்தப் புகாரை மீண்டும் விசாரிக்கக் கோரி, அப்போதைய சாலைப் பணிகளின் துணை ஒப்பந்ததாரரான சாஜன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். முந்தைய விசாரணையில் முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சாஜன் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அனுமதி அளித்துள்ளார். இதுதொடர்பான கோப்பு முதல்வர் வி.டி. சதீசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.