தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிகக் கட்டணமே முக்கியக் காரணம்; கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் வலியுறுத்தல்.

புதுடெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 946 எம்பிபிஎஸ் இடங்களில் 93 சதவீதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதே இவ்வளவு இடங்கள் காலியாக இருப்பதற்கு முக்கியக் காரணம் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டுக்கான நீட் இளநிலை மருத்துவப் படிப்பு (NEET-UG) கலந்தாய்வின் சிறப்புக் காலியிடச் சுற்றில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, தமிழகத்தில் 688 இடங்களும், புதுச்சேரியில் 187 இடங்களும் என மொத்தம் 875 இடங்கள் காலியாக உள்ளன.

மொத்தமுள்ள 946 காலியிடங்களில் 920 இடங்கள் (97 சதவீதத்துக்கும் அதிகம்) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டில் உள்ளன. மற்ற ஒதுக்கீடுகளில் 26 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

கர்நாடகாவில் 25, மகாராஷ்டிராவில் 13, தெலங்கானாவில் 5, குஜராத்தில் 4 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரியில் 188 இடங்களும், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் 117 இடங்களும், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 82 இடங்களும் காலியாக உள்ளன. புதுச்சேரியில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் 95 இடங்களும், ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 88 இடங்களும் காலியாக உள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிகக் கட்டணம் காரணமாக மாணவர்கள் சேரத் தயங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், வட இந்திய மாணவர்கள் மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் காரணமாக தென்னிந்தியக் கல்லூரிகளில் சேர விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார்.

சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்காக 40 முதல் 50 சதவீதம் வரை கட்டணச் சலுகை வழங்கி வருகின்றன. நீட் தேர்வுக்கான தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பதற்குப் பதிலாக, கல்லூரிகள் கட்டணத்தைக் குறைத்து காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

நியாயமான கட்டணம் அவசியம்: எய்ம்ஸ் இயக்குநர்

இதற்கிடையே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க வெளிப்படையான நடைமுறை தேவை என்று எய்ம்ஸ் இயக்குநர் நிகில் டாண்டன் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நியாயமான அளவில் லாபம் ஈட்ட அனுமதிக்க வேண்டும். அதேநேரத்தில், மருத்துவக் கல்விக்கான உண்மையான செலவுகளின் அடிப்படையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்லூரிகளின் கட்டடங்கள், ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள், பேராசிரியர்களின் ஊதியம், பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுக்கான செலவுகளைக் கணக்கில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக இருந்தும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சுமார் 2,000 இடங்கள் காலியாக இருப்பதற்கும் அதிகக் கட்டணம், மாணவர்களின் விருப்பப் பிரிவு தேர்வு மற்றும் மொழிப் பிரச்சினைகள் காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தாலும், தங்களுக்குப் பிடிக்காத மருத்துவப் பிரிவில் சேர மாணவர்கள் விரும்புவதில்லை. மேலும், மருத்துவர்கள் நோயாளிகளிடம் நேரடியாகப் பேசி அவர்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதால், மாநிலங்களுக்கு இடையிலான மொழிப் பிரச்சினையும் மருத்துவக் கல்வியில் முக்கியத் தடையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாகத் தொடங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பேராசிரியர்களை நியமிப்பதும் சவாலாக இருப்பதாகக் கூறிய அவர், தனியார் மருத்துவமனைகள் அதிக ஊதியம் வழங்குவதால் திறமையான மருத்துவ நிபுணர்களை அரசுத் துறை மருத்துவமனைகளில் தக்கவைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் பல் மருத்துவப் படிப்பில் 207 இடங்களும், பிஎஸ்சி செவிலியர் படிப்பில் 66 இடங்களும் காலியாக உள்ளன. எம்பிபிஎஸ், பல் மருத்துவம், செவிலியர் படிப்புகள் என மொத்தம் 1,219 இடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.