அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்துடன் தொடர்ந்து மோதல்.. எல்லைப் பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா – சீனா ராணுவத்தினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெறுவதாக எழுந்துள்ள தகவல்களைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். சீனாவுக்கு தொடர்ந்து நற்சான்றிதழ் வழங்குவதை நிறுத்திவிட்டு, நாட்டின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்துடன் தொடர்ந்து மோதல்கள் நடைபெறுவதாக இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP) தலைமை இயக்குநர் சத்ருஜித் கபூர் தெரிவித்திருப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டோக்லாம், கல்வான் மோதல்களுக்குப் பிறகு மீண்டும் தீவிரமான மோதல் உருவாகிறதா என்றும், ஆகஸ்ட் மாதம் தக்சிங் பகுதியில் சீன ஊடுருவல் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்டு ராணுவத் தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பிறகும் மோதல்கள் தொடர்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய ராணுவத்தின் ரோந்துப் பணிகளுக்கான அணுகல் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சீன இறக்குமதி அதிகரிப்பு: கார்கே கேள்வி

கல்வான் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த 2020-21 நிதியாண்டுக்குப் பிறகு, சீனாவிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி 102 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 155 சதவீதம் உயர்ந்து 112.16 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் கார்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஏற்றுமதிக்கு சீனா தடைகளை ஏற்படுத்துவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சீன முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும், சீனத் தொடர்புடைய தகுதியான நிறுவனங்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் (PLI) பலன்களை வழங்கவும் மத்திய அரசு பரிசீலிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மேக் இன் இந்தியா’ திட்டம், ‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா’ என்ற நிலைக்கு மாறிவிட்டதா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மோடி – ஜி ஜின்பிங் சந்திப்புகளால் என்ன பயன்?

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் குறைந்தது 23 முறை சந்தித்துள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்ற சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகள் 25 முறையும், இரு நாடுகளுக்கு இடையிலான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புப் பணிக்குழுக் கூட்டங்கள் (WMCC) 36 முறையும் நடைபெற்றுள்ளதாகவும் கார்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), பிரிக்ஸ் மாநாடுகள் உள்ளிட்ட சந்திப்புகளால் இந்தியாவுக்கு என்ன உறுதியான பலன்கள் கிடைத்துள்ளன என்றும், 2020 மே மாதத்துக்கு முந்தைய ரோந்துப் பகுதிகளுக்கான இந்தியாவின் அணுகல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட கார்கே, தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் பொறுப்புக்கூறல் அவசியமே தவிர, புகைப்படங்களுக்காக நடத்தப்படும் ராஜதந்திரச் சந்திப்புகள் தேவையில்லை என விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்திலும் நாட்டு மக்களிடமும் பிரதமர் மோடி உண்மை நிலையை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு

இதற்கிடையே, அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக இந்திய – சீன ராணுவத்தினரிடையே மோதல்கள் நடைபெற்று வருவதாகவும், அவை இன்னும் தொடர்வதாகவும் காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியுள்ளது.

ஜூலை மாதம் முதலே சீன ராணுவத்துடனான மோதல்கள் குறித்த செய்திகள் வெளியாகி வந்தபோதும், மத்திய பாஜக அரசு அவற்றை மறைக்க முயன்றதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சிரித்துப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், ஒருபுறம் இந்திய வீரர்களுடன் சீன ராணுவம் மோதிக்கொண்டிருக்கும்போது, மறுபுறம் சீன அதிபரைப் பிரதமர் வரவேற்பது வீரர்களின் தியாகத்தை அவமதிப்பதற்குச் சமம் என விமர்சித்துள்ளது.

சில நேரங்களில் சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்குவதும், சில நேரங்களில் ரோந்துப் பகுதிகள் மற்றும் நாட்டின் நிலப்பரப்பு மீதான கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதும் என பிரதமர் மோடி நாட்டுக்குத் துரோகம் இழைத்துள்ளதாகவும் காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பு, சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை, ராணுவத்தின் ரோந்துரிமை ஆகிய விவகாரங்களில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை தற்போது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.