கோயிலுக்குச் சொந்தமான 20.94 ஏக்கர் நிலம் தனிநபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டதைத் தடுக்கத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரின் பணிநீக்க உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், தனிநபர்களுக்கு மாற்றப்பட்ட கோயில் நிலத்தை மீட்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், வடவள்ளியில் உள்ள மதிபாலீஸ்வரர் அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 20.94 ஏக்கர் நிலம், பல கோடி ரூபாய் மதிப்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தின் பட்டா தனிநபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டபோது, அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நிலத்தை மாற்றிய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்றும் கோயிலின் தக்காராகவும், செயல் அலுவலராகவும் பணியாற்றிய ராமகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரைப் பணிநீக்கம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்தப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, துறைரீதியான விசாரணையில் ராமகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயில் நிலத்தைப் பாதுகாக்கத் தவறிய செயல் அலுவலரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து அரசின் உத்தரவை உறுதி செய்தார்.
மேலும், கோயில் நிலத்தை மீட்பது பொதுநலன் சார்ந்த விவகாரம் என்பதைக் கருத்தில் கொண்டு, தனிநபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்ட நிலத்தை மீட்க தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.