2026 சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது அசையாச் சொத்துக்கள் குறித்து தவறான தகவல்கள் தந்ததாக முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான எஸ். தினேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனது 2026-ஆம் ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல அசையாச் சொத்துக்கள் குறித்துத் தகவல்களை வேண்டுமென்றே மறைத்தது, தவறாகச் சித்தரித்தது மற்றும் பொய்யான அறிவிப்புகளை வெளியிட்டது ஆகியவற்றின் அடிப்படையில் முதல்வரின் தேர்தலைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில், கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தை அரசு புறம்போக்கு நிலமாக இருந்தபோதும், அதை ரூ.30,000-க்கு 1997-ல் வாங்கியதாக முதல்வர் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் எனவும் விஜய் குறிப்பிட்டிருந்ததாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கிராம ‘ஏ’ பதிவேட்டை ஆய்வு செய்தபோது, அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்ததாக வழக்கறிஞர் வி.ஆர். சண்முகநாதன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை போரூரில் 33,955 சதுர அடி பரப்பிலான விவசாயம் அல்லாத நிலத்தை ரூ.9.13 கோடிக்கு 2010-ல் வாங்கியதாக விஜய் குறிப்பிட்டிருந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பத்திரப்பதிவுத் துறை ஆவணங்களின்படி 20,773 சதுர அடி நிலத்தை மட்டுமே ரூ.7.5 கோடிக்கு அவர் வாங்கியதாகத் தெரிகிறது என்றும், நிலத்தின் பரப்பளவு மற்றும் வாங்கிய தொகை ஆகியவை அதிகமாகக் குறிப்பிடப்பட்டதற்கு விளக்கம் இல்லை என்றும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை பாடியில் உள்ள வணிகக் கட்டடத்தை ரூ.1.95 கோடிக்கு 2009-ல் வாங்கியதாகவும், அதன் கட்டுமானத்திற்காக ரூ.3.9 கோடி செலவிட்டதாகவும், அதன் தற்போதைய மதிப்பு ரூ.7 கோடி என்றும் விஜய் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், 23,460 சதுர அடி கட்டுமானப் பரப்பளவு கொண்ட அந்த வணிகக் கட்டடம் 2026 பிப்ரவரி 12-ஆம் தேதி ரூ.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சொத்து 2009-ல் வாங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடனான பரிமாற்றப் பத்திரத்தின் மூலம், கொரட்டூரில் இருந்த சொத்துக்கு ஈடாகப் பெறப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
அந்த சொத்து பரிமாற்றப் பத்திரம் மூலம் பெறப்பட்டது என்பதையும், தேர்தல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பே ரூ.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதையும் முதல்வர் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்றும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
நீலாங்கரை பங்களா
நீலாங்கரையில் உள்ள பங்களா பரம்பரைச் சொத்து அல்ல என்றும் மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், அந்த சொத்தை 2003-ல் சுமதி ரகுநாத் கெய்டோண்டே என்பவரிடம் இருந்து வாங்கியதாகவும், பின்னர் 2005-ல் தனது மகன் விஜய் பெயருக்கு செட்டில்மென்ட் பத்திரம் மூலம் மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில், எந்தவித பணப் பரிவர்த்தனையும் இல்லாமல் அந்த சொத்தை மகனுக்கு வழங்குவதாக 2005-ஆம் ஆண்டு செட்டில்மென்ட் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பு கூறியுள்ளது.
17,100 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்த சொத்து மற்றும் 5,500 சதுர அடி கட்டடத்தின் மதிப்பு ரூ.2.75 கோடி என 2005-ஆம் ஆண்டு செட்டில்மென்ட் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், 2026 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அந்த நிலத்தில் 18,633 சதுர அடி கட்டுமானப் பரப்பை உருவாக்க ரூ.18.73 கோடி செலவிட்டதாகவும், தற்போது அந்த சொத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.20 கோடி என்றும் விஜய் குறிப்பிட்டிருந்ததாக மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முதல்வர் விஜய் தரப்பு பதில்
இந்த தேர்தல் மனுவை நீண்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, ஆதாரமற்றவை, அடிப்படை இல்லாதவை என்றும், வெறும் ஊகங்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் மனுவில், தனது பிரமாணப் பத்திரத்தில் உள்ள ஒவ்வொரு சொத்து குறித்தும் அதன் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் மிக நுணுக்கமாகப் பிரிக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, அவை தேர்தலை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ காரணத்தை உருவாக்காது என்றும் விஜய் தரப்பு கூறியுள்ளது.
மேலும், இந்தக் கூறப்படும் தவறுகள் தேர்தல் முடிவை எந்த வகையிலும் பாதித்தன என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நான் நன்கு அறியப்பட்ட திரைப்பட நடிகர் என்பதையும், நல்ல மனிதர் என்பதையும், அரசியலில் நேர்மையான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற மாற்றை வழங்குபவர் என்பதையும் அறிந்துதான் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் இருப்பதும் வாக்காளர்களுக்குத் தெரியும்” என்று விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
ஒரு சொத்தின் மதிப்பு சற்று அதிகமாகவோ குறைவாகவோ குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதனால் எந்த வாக்காளரும் தனது வாக்கை மாற்றிப் பதிவு செய்திருக்க மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தனது தேர்தல் பிரமாணப் பத்திரம் எந்தக் குறைபாடும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டதாகவும், தனது வேட்புமனுவும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் 1,20,365 வாக்குகள் பெற்று, 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனது தேர்தலை ரத்து செய்ய முடியாது என்றும் அவர் தரப்பு வாதிட்டுள்ளது.
தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டும் மிகவும் பலவீனமானது என்றும், யார் தேர்தல் உரிமையைத் தடுத்தனர், யாருடைய வாக்குரிமை பாதிக்கப்பட்டது என்பது குறித்து மனுவில் ஒரு வரிகூட குறிப்பிடப்படவில்லை என்றும் விஜய் தரப்பு கூறியுள்ளது.
மேலும், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சொத்துக்களை மறைத்ததாகவோ அல்லது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பதாகவோ மனுதாரர் கூறவில்லை என்றும் விஜய் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நிலத்தின் பரப்பளவு, வாங்கிய தொகை, கட்டுமானப் பரப்பளவு, சந்தை மதிப்பு அல்லது சொத்து எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பான சிறிய அளவிலான வேறுபாடுகளை, ஏற்கெனவே சொத்து வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய முறைகேடாகக் கருத முடியாது என்றும் விஜய் தரப்பு வாதிட்டுள்ளது.
இந்த வழக்கில் முதல்வர் விஜய் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்து வரும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அவரது தரப்பு வாதங்களை கேட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், பிரஞ்சல் அகர்வால் மற்றும் டிக்சிதா கோஹில் ஆகியோருடன் இணைந்து வாதிட்டார்.
இந்த வழக்கில் மற்றொரு தரப்பினரின் வாதங்களை கேட்பதற்காக விசாரணை அக்டோபர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே, கொடைக்கானல் அரசு புறம்போக்கு நிலம் முதல் பாடி வணிகக் கட்டடம், நீலாங்கரை பங்களா உள்ளிட்ட சொத்துக்கள் தொடர்பாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான அல்லது முரண்பட்ட தகவல்கள் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனு அடிப்படை ஆதாரமற்றது என்றும் இதனை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் முதல்வர் விஜய் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.