சென்னை: அதிமுகவின் நாளிதழான  ‘நமது அம்மா’  நாளிதழை எடப்பாடி தரப்பு கையப்படுத்தி உள்ள நிலையில்,  அதிமுகவின் புதிய  அதிகாரப்பூர்வ நாளேடு ‘போர்வாள்’  வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாளிதழை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.

அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘போர்வாள்’ தமிழ் நாளிதழை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருக்கும் ஒரு தரப்பினர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சி.வி. சண்முகம் தலைமையில் தனியாக செயல்படத் தொடங்கியுள்ளனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக இருந்த ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழ், ‘ஜெ நியூஸ்’ தொலைக்காட்சி உள்ளிட்டவை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இவ்விரண்டிலும் கடந்த சில நாள்களாக இபிஎஸ் தரப்புக்கு எதிரான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், போர்வாள் என்ற நாளிதழை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.அதிமுக தலைமை அலுவலகத்தில் போர்வாள் நாளிதழை இபிஎஸ் இன்று வெளியிட்ட நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் இனிமேல் ‘போர்வாள்’ என்ற நாளிதழ் மூலம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “போர்வாள்” தமிழ் நாளிதழை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் இந்த நாளேடு வெளியிடப்பட்டது. அதிமுகவின் கொள்கைகள், கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் அரசியல் செய்திகள் பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் இந்த நாளேடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி மோதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மே 13 ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த வாக்கெடுப்பின்போது அதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த உள்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்தது. 47 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே சமயம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் சட்டப்பேரவையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டி, சி.வி. சண்முகம் அணியைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு தாக்கல் செய்தது. அவர்களை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த “நமது அம்மா” நாளேடு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி வசம் சென்றது. அதனால் அந்த நாளேட்டின் தலைமை ஆசிரியராகவும் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த கல்யாண சுந்தரம் தனது பொறுப்பிலிருந்து விலகினார். மேலும், நாளேட்டில் இடம் பெற்று வந்த எடப்பாடி பழனிசாமியின் பெயரும் நீக்கப்பட்டது.

[youtube-feed feed=1]