சென்னை கோட்டை – பீச் இடையிலான MRTS ரயில் வழித்தடத்தை இரட்டிப்பாக்க தமிழக அரசு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. இதற்காக உயர் நீதிமன்றம் அருகே உள்ள மாநகராட்சி சாலையோரத்தில் 3 முதல் 4 மீட்டர் இடத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விரிவாக்கத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட நிலம் கிடைக்காததால் இந்த மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்டவாளம் அமைந்தால், தற்போது சுமார் 20 நிமிடங்களாக உள்ள ரயில் இடைவெளி 5 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MRTS-ஐ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முன், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்தப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் செலவை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MRTS-ஐ மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் பணிகளின் இடைக்காலத்தில், ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பை தெற்கு ரயில்வே 24 மாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும். இதற்கிடையில் நிலைய பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மை, டிக்கெட் கவுன்டர்கள், கழிப்பறைகள், லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட பொறுப்புகளை தமிழக அரசு ஏற்க உள்ளது.

இந்தப் பணிகளுக்காக மாதம் ரூ.5–6 கோடி, ஆண்டுக்கு சுமார் ரூ.60–70 கோடி செலவாகும் என CUMTA மதிப்பிட்டுள்ளது. இதுதொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.