SIR திருத்தப் பணிகளில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, SIR நடைமுறையில் வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, பெயர் தொடர்பாக நோட்டீஸ் பெறும் வாக்காளர்களுக்கு புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.

SIR பணியின்போது பழைய பதிவுகளுடன் பெயரை இணைக்க முடியாதவர்கள் அல்லது விவரங்களில் முரண்பாடு உள்ளவர்கள் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டால், அவர்கள் இனி கட்டாயமாக தேர்தல் பதிவு அலுவலர் முன்பு நேரில் ஆஜராக வேண்டியதில்லை.

அவர்களது வீடுகளுக்கே BLO அதிகாரிகள் சென்று தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான விசாரணைகள் ஆன்லைனில் நடத்தப்படும். விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும். வாக்காளர் சார்பில் குடும்பத்தில் உள்ள வயது வந்த ஒருவரும் விசாரணையில் பங்கேற்கலாம்.

டெல்லியில் அக்டோபர் 30 வரை அவகாசம்

டெல்லியில் SIR தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 30, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்து முடிவு எடுப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அக்டோபர் 12 வரையும், அவற்றை முடிவு செய்ய நவம்பர் 10 வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பெயர் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

SIR பணியின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மட்டுமின்றி, பின்னர் 18 வயதை எட்டி வாக்களிக்கத் தகுதி பெற்ற இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களும் தொடர்ந்து நடைபெறும் பட்டியல் புதுப்பிப்பு முறையில் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.

இதற்காக தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பதிவு அலுவலர்கள் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இரவு தங்குமிடங்களில் வசிப்பவர்கள், தொழிலாளர் முகாம்களில் உள்ளவர்கள், வீடற்றவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் மற்றும் உதவி மையங்களை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மனு… தேர்தல் ஆணையம் விளக்கம்

இதற்கிடையே, SIR நடவடிக்கைகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டப்பூர்வ கடமைகளை மீறியதாகக் கூறி அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாக்காளர் பெயர் நீக்கங்கள் தொடர்பாக நீதித்துறை அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், டெல்லியில் SIR-ன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ்கள் குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. 33 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ‘logical discrepancy’ உள்ளிட்ட காரணங்களுக்காக நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், அவை இயந்திரத்தனமாக வழங்கப்பட்டிருக்கலாம் என நீதிமன்றம் கவலை தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், வாக்காளர் பெயர் விடுபட்டால் என்ன செய்வது? நோட்டீஸ் வந்தால் எப்படி விளக்கம் அளிப்பது? என்பதற்கு புதிய நடைமுறைகள் மூலம் தேர்தல் ஆணையம் கூடுதல் வாய்ப்பை வழங்கியுள்ளது.

SIR பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மீதமுள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே, இந்த நடவடிக்கையில் எத்தனை வாக்காளர்களின் பெயர்கள் இறுதியாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது முழுமையாகத் தெரியவரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.