இந்தியாவின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.8% என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் குறித்து முன்னாள் மத்திய நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர், 7.8% வளர்ச்சி பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள தரவுகளை ஆழமாகப் பார்க்க வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டு முதல் காலாண்டின் GDP வளர்ச்சியும் 7.8% என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் கடந்த ஆண்டுக்கான GDP மதிப்பீடு 6.9% ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாகத் தெரிகிறது என அவர் கூறினார்.

GDP கணக்கில் மாற்றம்?

“பணவீக்கத்தை கழித்த பிறகு கிடைக்கும் ‘Real GDP’ அடிப்படையில்தான் 7.8% வளர்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய விலையில் கணக்கிடப்படும் GDP தரவிலும் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் காலாண்டின் தற்போதைய விலை GDP ரூ.86 லட்சம் கோடியாக இருந்ததாக அரசு கூறியது. தற்போது அது ரூ.80 லட்சம் கோடியாக திருத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இல்லாமல் இருந்திருந்தால், இந்த ஆண்டின் வளர்ச்சி வெறும் 2.6% ஆகத்தான் இருந்திருக்கும்” என கர்க் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தரவுகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் சிறப்பாகத் தெரிகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“அனைத்து துறைகளும் வளரவில்லை”

பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் சிறப்பாக வளர்ந்துள்ளதாக கூறப்படுவதை கர்க் மறுத்தார்.

அரசின் கடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடும்போது விவசாயம் மற்றும் சுரங்கத் துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் உற்பத்தித் துறை எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது என்றார்.

அதேநேரத்தில், அரசின் மூலதனச் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளில் நல்ல வளர்ச்சி இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றில் அரசு மேற்கொள்ளும் முதலீடுகள் உண்மையானவை என்றும் தெரிவித்தார்.

“மக்களின் நுகர்வு குறைந்துள்ளது”

மக்களின் நுகர்வு தொடர்பான தரவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என கர்க் கூறினார்.

“கடந்த ஆண்டு அரசு வெளியிட்ட நுகர்வு தரவுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மக்களின் நுகர்வு எதிர்மறை வளர்ச்சியில் உள்ளது. இது பொருளாதாரத்தின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள முக்கியமானது” என்றார்.

எனினும், கார்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களின் விற்பனை மற்றும் பல்வேறு சந்தைத் தரவுகள் இரட்டை இலக்க வளர்ச்சியைக் காட்டுவதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் சுட்டிக்காட்டினார்.

“உண்மையான நிலையை அரசு முதலில் ஏற்க வேண்டும்”

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த கர்க்:

“முதலில் இந்திய பொருளாதாரத்தின் உண்மையான நிலையை அரசு புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு, சரியான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புள்ளிவிவரங்களை மாற்றி நல்ல நிலை இருப்பது போல காட்டுவதைவிட, உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து தீர்ப்பதே முன்னேற்றத்துக்கு வழி” என்றார்.