உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியை ஸ்லீப்பர் பேருந்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக குல்தீப் மற்றும் சந்தீப் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடும்பத்தினருடன் தகராறு… தனியாக சென்ற மாணவி
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், நொய்டாவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.
அன்று கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், தவறுதலாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள பாரி சவுக் பகுதியில் இறங்கியுள்ளார்.
அப்போது அந்த வழியாக காலியாக சென்ற ‘விஸ்வநாத்’ என்ற ஸ்லீப்பர் பேருந்தை பார்த்துள்ளார். பேருந்தை நிறுத்துமாறு சைகை செய்ததும், ஓட்டுநர் குல்தீப்பும், நடத்துநர் சந்தீப்பும் பேருந்தை நிறுத்தியுள்ளனர்.
அவர்கள் நொய்டா செக்டார் 63 பகுதிக்குச் செல்வதாகக் கூறி சிறுமியை பேருந்தில் ஏற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பேருந்துக்குள் கொடூரம்
பேருந்தில் சிறுமி ஏறிய சிறிது நேரத்தில், நடத்துநர் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், எதிர்த்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் போலீசில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அதே இரவில், டெல்லி காஷ்மீரி கேட் ஐ.எஸ்.பி.டி. அருகே ரிங் ரோட்டில் சிறுமியை இறக்கிவிட்டு இருவரும் பேருந்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமி காஷ்மீரி கேட் போலீசாரை அணுகி நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.
பேருந்து நிறுத்துமிடத்தில் கைது
சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் குல்தீப் மற்றும் சந்தீப்பை கைது செய்தனர்.
பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழுதான பேருந்தை ஓட்டிச் சென்றபோது…
விசாரணையில், அந்த ஸ்லீப்பர் பேருந்தில் பழுது ஏற்பட்டதால், அதை கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூர் பகுதியில் உள்ள பணிமனைக்கு பழுதுபார்க்க கொண்டு சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
பழுது பார்த்த பின்னர், காலியாக இருந்த அந்த பேருந்தை திமார்பூர் நோக்கி குல்தீப்பும் சந்தீப்பும் ஓட்டிச் சென்றுள்ளனர்.
அப்போது பாரி சவுக் பகுதியில் சிறுமியை அவர்கள் சந்தித்துள்ளனர். அங்கிருந்து காஷ்மீரி கேட் வரை பேருந்து சுமார் 47 கி.மீ. பயணித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.