ஆலப்புழா கருவாட்டா பகுதியில் 65 வயதான சிவன்குட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட 4 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டில் இருந்த தங்க நகைகளைத் திருடி, ஐபோன் மற்றும் பைக் வாங்குவதற்காக இந்த கொலை திட்டமிடப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று சிவன்குட்டியும் அவரது பேத்தியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஆனால், கொலை நடந்தபோது சிறுமி வீட்டில் இல்லை. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் இருந்த அவர், பின்னர் தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சிவன்குட்டி

இந்நிலையில், சிவன்குட்டியின் கை, கால்கள் பின்னால் இழுத்துக் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக அவரது உடல் வீட்டில் கிடந்தது. மூச்சுத்திணறடித்து அவர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தடயங்களை அழிக்க கொலையாளிகள் வீட்டுக்குள் மிளகாய்த் தூளையும் தூவியிருந்தனர். வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளன.

சம்பவத்தன்று இரவு வீட்டின் கழிவறை வென்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த சிறார்கள், சிவன்குட்டியை கொலை செய்துள்ளனர். கொலை நடந்த காட்சிகளை வீடியோ கால் மூலம் சிறுமிக்கு நேரடியாகக் காட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை தேர்வு இருப்பதாகக் கூறி உறவினர் வீட்டிலிருந்து புறப்பட்ட சிறுமி, வீட்டைத் திறக்க முடியவில்லை என்று அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது, வீட்டின் சமையலறைக் கதவு திறந்திருந்ததுடன், சாப்பாட்டு அறையில் சிவன்குட்டியின் உடல் கிடந்தது.

முதலில் சிறுமி மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், தாத்தா கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டும் அவர் எந்த அதிர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், உடனடியாகத் தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பெண் போலீசார் முன்னிலையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாத்தாவைக் கொல்ல சிறுமியே திட்டம் தீட்டியதும், மற்ற 3 சிறார்களின் உதவியுடன் கொலை நடந்ததும் தெரியவந்தது. செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் போலீசார் குற்றவாளிகளை பிடித்துள்ளனர்.

இந்தக் கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சைபர் பிரிவு உதவியுடன் போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறார்கள் என்பதால், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.