எஸ்பிஐ வங்கியின் முன்னாள் கேஷ் அதிகாரி ரூ.1.93 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது 2-வது ஜாமீன் மனுவையும் குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நர்மதா மாவட்டம் ராஜ்பிப்ளா எஸ்பிஐ கிளையில் கேஷ் அதிகாரியாக பணியாற்றிய பங்மோய் சக்ரவர்த்தி, ஏடிஎம் மற்றும் வங்கியின் உள்கட்டமைப்பு மென்பொருளில் முறைகேடு செய்து பணத்தை கையாடல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஏடிஎம் திரையில் இருப்புத் தொகை குறையாத வகையில் மாற்றம் செய்துவிட்டு, அதிலிருந்த பணத்தை அவர் எடுத்ததாகவும், பின்னர் வங்கியின் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் போலியான பணம் செலுத்திய பதிவுகளை உருவாக்கி மோசடியை மறைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜ்பிப்ளா உள்ளிட்ட 4 ஏடிஎம்களில் இருந்து மொத்தம் ரூ.1.93 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் சக்ரவர்த்தி ஏடிஎம் மையங்களில் இருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாகவும், அவரது செல்போன் இருப்பிடத் தகவல்களும் இதை உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2025 அக்டோபர் 17-ம் தேதி அவர் வேறு கிளைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டபோதும், அவரது கேஷ் அதிகாரி ஐடி மற்றும் கடவுச்சொல் நவம்பர் 6-ம் தேதி வரை செயல்பாட்டில் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் வங்கி பதிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் சக்ரவர்த்தி 2025 நவம்பர் 28-ம் தேதி கைது செய்யப்பட்டு, தொடர்ந்து சிறையில் உள்ளார்.

தன்னை பொய்யாக வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும், தனக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் விசாரணை முடிந்துவிட்டதாகவும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், சிசிடிவி காட்சிகள், செல்போன் இருப்பிடத் தகவல்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை பதிவுகள் உள்ளிட்ட வலுவான டிஜிட்டல் ஆதாரங்கள் இருப்பதாலும், மோசடியின் அளவு மிகப்பெரியதாக இருப்பதாலும் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி எச்.டி. சுதார் தெரிவித்தார்.

மேலும், தனிப்பட்ட லாபத்துக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மோசடி தீவிரமான பொருளாதாரக் குற்றம் என்றும், இதுபோன்ற குற்றங்கள் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஜாமீன் வழங்குவதில் கடுமையான அணுகுமுறை தேவை என்றும் நீதிமன்றம் கூறியது.