மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என கூறிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது என்பதையும் உறுதிபடுத்திஉள்ளார்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதியைப் பெற்று திட்டங்களை செயல்படுத்துவோம்; மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியான, மாநில உரிமை சார்ந்த நிலையை தவெக கடைபிடிக்கும் என்றும் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பரங்குன்றம் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல்குமார், “மதுரை மாநகராட்சியில் ரூபாய் 400 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. மதுரை மாநகராட்சியில் இதுவரை நடைபெற்றுள்ள ஊழல்கள் அனைத்தும் விசாரிக்கப்படும். மதுரை மாநகராட்சியில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தைத் தர வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாகவுள்ளார்.
குதிரை பேரம் நடைபெறுவதற்கான அவசியம் இல்லை; முதல்வர் அதனை அனுமதிக்கவும் மாட்டார். மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளதால் குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் முதல்வர் சந்தித்து வாழ்த்து பெறுவார்
அதுமட்டுமின்றி, ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள அனைத்து இடங்களிலும் அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம். தமிழ்நாட்டில் போதை இல்லாத நிலையைப் படிப்படியாகக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். அதன் ஒருபகுதியாக தான் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ, அதனை நிறைவேற்ற தயாராக உள்ளோம். நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களால் ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை.
நீட் தேர்வு விஷயத்தில் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த தேர்வே மிக கடினமான ஒன்று. நீட் தேவையில்லை என்பதுதான் எங்களது நோக்கமும். இந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு ரேங்கிங் முறையிலும் மிகப்பெரிய குளறுபடி நடைபெறுகிறது. நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை. இது தேவையற்ற ஒன்று.
எங்களுக்கு ஆதரவளித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் என்பதெல்லாம் அவர்களின் உட்கட்சி விவகாரம். அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை பற்றி பேச எங்களுக்கு உரிமை இல்லை. திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என அவர்கள் கட்சி எம்எல்ஏக்களே குற்றம் சாட்டியுள்ளனர். திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் 100% நடைபெற்றன. அவர்களது கூட்டணி கட்சியினர் அனைவரிடமும் இதுகுறித்து பேசியுள்ளனர். அது குறித்து நாங்கள் அறிந்தோம்.
இதுகுறித்து பல ரகசிய ஆலோசனைகள் நடைபெற்றது எங்கள் கவனத்திற்கு வந்தது. ஆனால் இதனை விரும்பாத தலைவர்களால் மக்கள் ஏற்காத கட்சிகளின் புறவழி ஆட்சி நிராகரிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]