இளம் வயதினர் சமூக வலைதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் வைத்து, அவர்களின் பயன்பாடு ஆபத்தானதா என்பதை முடிவு செய்யக்கூடாது. அந்த நேரத்தை அவர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், இளம் வயதினரின் சமூக வலைதள பயன்பாடு மற்றும் அவர்களின் மனநலன் குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஒரு இளம் வயதினர் தினமும் ஒரு மணி நேரம் சமூக வலைதளங்களில் பதிவுகளை தொடர்ந்து பார்ப்பது மட்டும் பெரிய பிரச்னையாக இருக்காது. ஆனால், அதே நேரத்தை தொடர்ந்து ‘லைக்’, ‘கமென்ட்’ போன்றவற்றை சரிபார்ப்பதற்கும், தனது தோற்றத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வாக உணர்வதற்கும், நேரில் பழகும் நண்பர்களை விட்டு விலகுவதற்கும் பயன்படுத்தினால் அது கவலைக்குரிய அறிகுறியாக இருக்கலாம்.

3 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்தினால்?

சமூக வலைதளங்களை ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துவது பொதுவாக அதிகப்படியான பயன்பாடாக கருதப்படுகிறது. ஆனால், இதை மட்டும் வைத்து ஒரு இளம் வயதினர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று முடிவு செய்ய முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக ஒரு இளம் வயதினர் தினமும் நான்கு மணி நேரம் சமூக வலைதளங்களை பயன்படுத்தினாலும், அவரது படிப்பு, குடும்ப வாழ்க்கை பாதிக்காமல் இருந்தால், போதுமான தூக்கம் மற்றும் உணவை எடுத்துக்கொண்டு, தேவையான நேரத்தில் மொபைலை கீழே வைக்க முடிந்தால், அந்த பயன்பாடு ஆரோக்கியமானதாக இருக்கலாம்.

‘லைக்’ பார்க்கும் பழக்கம் ஆபத்தா?

மாறாக, சமூக வலைதளங்களில் கிடைக்கும் ‘லைக்’, ‘கமென்ட்’ மற்றும் பிறரின் பாராட்டுகளை தொடர்ந்து எதிர்பார்ப்பது, தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வாக நினைப்பது, நேரில் பழகும் நண்பர்களை தவிர்ப்பது போன்றவை பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இதுபோன்ற சமூக வலைதள பயன்பாடு சில நேரங்களில் மன உளைச்சல், தனிமை, அடையாளம் தொடர்பான குழப்பம் அல்லது சமூக அங்கீகாரத்திற்கான அதிகப்படியான எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன?

பிரச்னை ஏற்பட்ட பிறகு மட்டுமே மொபைலை பறிப்பது அல்லது சமூக வலைதளங்களை தடை செய்வது தீர்வாகாது. இளம் வயதினருக்கு ஆலோசனை வழங்குதல், மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகளை கற்றுக்கொடுத்தல், உடற்பயிற்சி மற்றும் இணையம் சாராத பொழுதுபோக்குகளில் ஈடுபட ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் உதவக்கூடும்.

திரை நேரத்தை கட்டுப்படுத்தும் வசதிகளை பயன்படுத்துவதும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில், இளம் வயதினரை தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை பார்க்கத் தூண்டும் சமூக வலைதளங்களின் அம்சங்களையும் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் தேவை என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தைவிட, அந்த நேரத்தில் இளம் வயதினர் என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அவர்களின் தூக்கம், படிப்பு, உடல்நலம், குடும்ப உறவுகள் மற்றும் நேரடி நட்பு வட்டம் பாதிக்கப்படுகிறதா என்பதையே பெற்றோர் கவனிக்க வேண்டும்!