ஆஸ்திரேலியா மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளை இணைக்கும் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி வெளியிட்டுள்ள புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சர்வதேச தகவல் தொடர்பில் சுமார் 99 சதவீதம் இந்த கடலடி கேபிள்கள் மூலமாகவே நடைபெறுகிறது. இந்த கேபிள்கள் சேதமடைந்தால் நிதிச் சந்தைகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் கிளவுட் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் ஐரோப்பிய கடற்பகுதி, தைவான் உள்ளிட்ட இடங்களில் கடலடி கேபிள்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் பின்னணியில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அமைதிக்காலத்திலேயே சில நாடுகள் கேபிள் கட்டமைப்புகளை சோதித்து வருவதாகவும், எதிர்கால மோதல்களில் தகவல் தொடர்பை முடக்குவதற்கான நடவடிக்கையாக இது இருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது.

“கடலுக்கு அடியில் உள்ள பகுதிகள் போர்க்களமாக மாறி வருகின்றன” என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

கேபிள்களை தொடர்ந்து கண்காணிப்பது, விரைவாக பழுதுபார்க்கும் திறனை அதிகரிப்பது, கடலடி கண்காணிப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றை ஆஸ்திரேலியா மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

மேலும், இந்தோ-பசிபிக் நாடுகள் ஒன்றிணைந்து கடலடி கேபிள்களை பாதுகாக்கவும், அவசர காலங்களில் விரைவாக பழுதுகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், கடலடி கேபிள்கள் சேதமடைவதில் பெரும்பாலானவை திட்டமிட்ட தாக்குதல்களால் ஏற்படுவதில்லை. சுமார் 86 சதவீத பாதிப்புகள் கப்பல்களின் நங்கூரம் அல்லது மீன்பிடி படகுகளால் ஏற்படுகின்றன. 7 சதவீதம் கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும், 4 சதவீதம் உராய்வாலும், 3 சதவீதம் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் ஏற்படுவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.