சென்னை: தவெக ஆட்சி அமைக்க முதலில் ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்க விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக,  அமைச்சரவையில்  எத்தனை இடங்கள், எந்த இலாகா என்பது குறித்து, விவாதிக்க  காங்கிரஸ் கட்சிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை டெல்லியில் காங்கிரஸ் மேலிட தமிழக பொறுப்பாளர்  உறுதிபடுத்தி உள்ளார். 108 இடங்களை  மட்டுமே பெற்றிருந்த தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி முதன்முதலாக ஆதரவு வழங்கியது. இதற்காக பல ஆண்டு கால திமுகவுடனான நட்பை உதறிதள்ளியது. இதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக என பல கட்சிகள் தவெக ஆட்சி அமைய ஆதரவு வழங்கி உள்ளன.

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.,க்கள்   டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் கட்சி தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ,  தவெகவிடம் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சரவையில் இடம்பெற அதிகாரப்பூர்வ அழைப்பு முறைப்படி விடுக்கப்பட்டுள்ளது.

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.  எத்தனை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை தமிழ்நாட்டு முதல்வர் ஜோசப் விஜய் முடிவு செய்வார்.

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் தனது முழு பலத்தை வெளிப்படுத்தும்.அதற்கான பணிகளை இப்போதே தொடங்க காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

[youtube-feed feed=1]