டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) தலைமையில் நடைபெற்ற போராட்ட பேரணியின்போது மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்தது.
இந்த மனுவை அவசர பட்டியலில் சேர்க்கக் கோரி ஆஜரான வழக்கறிஞரிடம், “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையாகக் கூறினார்.

மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், மாணவர்கள் தற்போது சிரமத்தில் இருப்பதால் வழக்கை வியாழக்கிழமையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, “இப்போது வீடியோக்களை ஆய்வு செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. அவற்றைப் பார்க்க எங்களிடம் நேரமும் இல்லை” என்று தெரிவித்தார்.
இதற்குப் பிறகும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து வழக்கறிஞர் மீண்டும் எடுத்துரைத்தபோது, “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். எந்த வீடியோவையும் பார்க்க நாங்கள் விரும்பவில்லை” என்று நீதிபதி மீண்டும் கடுமையாகப் பதிலளித்தார்.
இதையடுத்து, அவசர விசாரணைக்கான கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.