சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராக பதவி ஏற்றதற்கு காங்கிரஸ்  கட்சி கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதி அமைப்பின் பரந்த நலனைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி இராம சுகந்தன் வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் விளக்கம் வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற  பேரறிவாளன் (54 வயது) 31 ஆண்டுகள் சிறைவாசம் பெற்ற நிலையில்,  கடந்த 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின்மூலம் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு பலத்த எதிர்ப்புகளும் எழுந்தன.

இதற்கிடையில், சிறையில் இருந்தே சட்டப்படிப்பை படிதது வந்த பேரறிவாளன் சட்டப் படிப்பை முடித்து  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

சட்டப்படிப்பை முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிட முடியும். அந்த வகையில், சட்டப்படிப்பை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கில் ஏப்ரல் 27ந்தேதிஅன்று நடத்தியது. இதில் 1250 சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.

இதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனும் ஒருவர். புதிதாக வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வரவேற்புரையாற்றினார். இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் கார்த்திகேயன், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதன்பிறகே பேரறிவாளன் பார்கவுன்சில் மெம்பரானது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, பார்கவுன்சில் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி.யும், வழக்கறிஞருமான ஆா்.சுதா, குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோருக்கு இதுதொடர்பாக புகாா் மனு அனுப்பி உள்ள்ளதாக தெரிவித்தார். மேலும் பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை திரும்பப் பெற பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டின் துணைத்தலைவர் வாழப்பாடி இராம சுகந்தன், 

ஏ.ஜி. பேரறிவாளனை வழக்கறிஞராகப் பதிவு செய்ய தமிழ்நாடு வழக்கறிஞர் மன்றம் எடுத்த நடவடிக்கை கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

சட்டத் தொழில் நேர்மை மற்றும் மக்கள் நம்பிக்கையின் மீது தங்கியுள்ளது.

பதிவு என்பது மிக உயர்ந்த நெறிமுறைகளைப் பிரதிபலிப்பதாகவும், நிறுவனத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும்.

நீதி அமைப்பின் பரந்த நலனைக் கருத்தில் கொண்டு மன்றம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று பாா் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞா் பதிவுக் குழு தலைவருமான கே.பாலு விளக்கம் அளித்துள்ளாா்.  அவர் அளித்த விளக்கத்தில், சட்டப்படி ஒருவா் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராக பதிவு செய்யலாம்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா் வழக்கறிஞராக பதிவு செய்வது இது முதல்முறை அல்லை. பேரறிவாளனின் ஆவணங்கள் பாா் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டாா். இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை.

இவ்வாறு கூறி உள்ளார்.

 

[youtube-feed feed=1]