சென்னை: தவெக ஆட்சி அமைக்க  அழைக்க மறுத்தஆளுநரின் செயல்பாட்டில் தவறு இல்லை என்று திமுக தெரிவித்துள்ளது.

தனிப்பெரும் கட்சியை அழைத்து ஆட்சி அமைக்க அவகாசம் கொடுப்பதே சட்டமுறை. ஆட்சி அமைக்க மெஜாரிட்டி முக்கியம், அதை விடுத்து முன்கூட்டியே எண்ணிக்கை குறித்து ஆளுநர் கேள்வி எழுப்புவது விவாதத்திற்குரியது என்று தி.மு.கவின் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

இன்று ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,  ஆளுநருக்கு ஆதரவான திமுகவின் செயல்பாடு அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மிக முக்கியமான 4 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பின்னர்    செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும், அதனை ஒட்டுமொத்தக் கழகமும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் குறித்து பேசிய அவர், தி.மு.க யாரையும் வெளியேற்றவில்லை என்று தெளிவுபடுத்தி னார். நாங்க காங்கிரஸை வெளியேற்றவில்லை, அவர்களாகவே கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் காங்கிரஸ் எத்தகைய போக்கைக் கடைப்பிடித்ததோ, அதையே இங்கும் செய்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். பாஜக-வின் மதவாத அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே காங்கிரஸை அரவணைத்து சென்றதாகவும், ஆனால் அவர்களின் தற்போதைய செயல்பாடு துரோகம் இழைக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சி அமைப்பதில் ஆளுநர் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் குறித்தும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்தார். தனிப்பெரும் கட்சியை அழைத்து ஆட்சி அமைக்க அவகாசம் கொடுப்பதே சட்டமுறை. ஆனால், அதை விடுத்து முன்கூட்டியே எண்ணிக்கை (Majority) குறித்து ஆளுநர் கேள்வி எழுப்புவது விவாதத்திற்குரியது. அதேவேளையில், ஆளுநர் எடுக்கும் முடிவுகளில் திமுக தலையிடப் போவதில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். இன்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், விரைவில் திமுக-வின் சட்டமன்றக் குழுத் தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார்.

[youtube-feed feed=1]