மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலை கோலகலமாக நடைபெற்றது.
திருமண நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் பலர் புது தாலி மாற்றி பக்தியை வெளிப்படுத்தினர்.  பல பக்தர்கள் மணமக்களுக்குத் திருமாங்கல்யம், பட்டுத்துணிகள், பணம் முதலானவற்றை மொய்யாக வழங்கினர்.

உலகப்பிரசித்தி பெற்ற  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.  இந்த வைபத்துக்காக அமைக்கப்பட்டிருந்த திருமண மேடையானது,  வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால்  அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

துரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ஆம் நாளான ஏப்.26-ஆம் தேதி மீனாட்சிக்கு பட்டாபிஷேக நிகழ்வு நடைபெற்றது. 9-ஆம் நாளான நேற்று ‘திக் விஜயம்’ நடைபெற்ற நிலையில், 10-ஆம் திருநாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதையடுத்து,  இன்று காலை 4 மணியளவில் மீனாட்சியம்மன் நான்கு சித்திரை வீதிகளில் திரு உலா வந்து கோயிலின் உள்ளே அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நாகப்பச்செட்டியார் கட்டளை மண்டகப்படியில் வெள்ளிச் சிம்மாசனத்தில் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து திருமண வைபவத்திற்கான பணிகள், பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில்,  காலை 8.35 மணியிலிருந்து 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக  நடைபெற்றது.

குலசேகரபட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு மாலை மாற்றித் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர். மாலை மாற்றிக் கொண்ட பின்னர் மீனாட்சிக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு பிரியாவிடை அம்மனுக்குப் பொட்டும் அலங்காரமும் செய்யப்பட்டன. பெண் பக்தர்கள் புது தாலி அணிந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற திருமணச் சடங்குகளுக்கு பின்னர், திருமண நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள் மணமக்களுக்குத் திருமாங்கல்யம், பட்டுத்துணிகள், பணம் முதலானவற்றை மொய்யாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்மனும் சுவாமியும் ‘குண்டோதரனுக்கு அன்னம் வழங்கல்’ எனும் திருவிளையாடற் புராண நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும், அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

சித்திரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான எல்இடி திரைகளில் திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு செய்யப் பட்டிருந்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் கண்டு களித்ததுடன் திருக்கல்யாண நிகழ்வின் போது புது தாலி அணிந்து கொண்டனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும், பவள கனிவாய் பெருமாளும் நேற்று மாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தனர். இதனையடுத்து இன்று காலை திருக்கல்யாண மேடையில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி  தெய்வானையுடனும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் மணக்கோலத்தில் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளினர்.

இந்நிலையில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு 3ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் வெளி வீதி முழுவதிலும் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய செல்வதற்காக முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

500 ரூபாய் கட்டண ரசீது பெற்ற 2500 பக்தர்கள் காலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் வடக்கு ராஜகோபுரம் வழியாகவும், 200 ரூபாய் கட்டண ரசீது பெற்ற 3500 பக்தர்கள் வடக்கு – கிழக்கு சித்திரைத் வீதி அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட என மொத்தமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்படனர். கோயில் வளாகத்தை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 20 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டன. மேலும் அதிக வெயிலின் தாக்கம் இருப்பதால் 200 டன் தற்காலிக ஏசி பொறுத்தப்பட்டன.

திருக்கல்யாண மேடை முழுவதும் 2 டன் அளவிற்கான பல்வேறு வகையான பூக்களை வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலின் தாக்கம் இருப்பதன் காரணமாக நான்கு சித்திரை வீதிகள் முழுவதிலும் நிழலுக்காக தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1.5லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை திருக்கல்யாண விருந்தும் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று நேற்று மாலை முதல் மாப்பிள்ளை அழைப்பு விருந்தும் நடைபெற்ற நிலையில், இந்த விருந்தின்போது  சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக முயற்சி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி்தரிசனம் செய்து விருந்து உண்டு ,மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது.

திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை இந்த விருந்து நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, “தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக சீர்வரிசைகளுடன் மதுரை வருகிறார் கள்ளழகர். அவர் வருவதற்கு முன்னரே மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விட்டதால், கோபித்துக் கொண்ட அவர் வைகையாற்றில் இறங்கி குளித்து விட்டு வண்டியூர் சென்று விடுகிறார். அன்றிரவு அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கி விட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்பி விடுகிறார்” என்பது தான்  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

[youtube-feed feed=1]