பெங்களூரின் பேலஸ் ரோட்டில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் மாதக்கணக்கில் தங்கி ரூ. 16 லட்சம் வாடகை நிலுவை வைத்த நபருக்கு வட்டியுடன் நிலுவையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முகமது ரஃபீக் பல்லிவலப்பில் என்ற நபர் கடந்த 2025 மார்ச் 27ஆம் தேதி நாளொன்றுக்கு ரூ.5,737.5 (ஜி.எஸ்.டி. நீங்கலாக) கட்டணத்தில் குறுகிய காலம் தங்குதற்காக ஹோட்டலில் அறை எடுத்துள்ளார்.

அதற்காக ரூ. 80,000 முன்பணம் செலுத்திய நிலையில் 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிக கட்டணமுள்ள சூட் அறைக்கு மாறியுள்ளார்.

பின்னர், அறை வாடகையை ஒழுங்காக செலுத்தாததால் ஹோட்டல் நிர்வாகம் அவருக்கு பலமுறை நினைவூட்டியுள்ளது. இருந்தபோதும் நிலுவைத் தொகையையும் செலுத்தாமல் இடத்தையும் காலி செய்யாமல் போக்கு காட்டி வந்துள்ளார்.

ஹோட்டல் பதிவுகளின்படி, அக்டோபர் 8, 2025-க்குள், மொத்தக் கட்டணம் ரூ. 12.9 லட்சமாக அதிகரித்திருந்த நிலையில் ஹோட்டல் நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தை அடுத்து ரூ. 3.2 லட்சம் மட்டும் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து, நிலுவைத் தொகையைக் கேட்டு அக்டோபர் 24, 2025 அன்று ஹோட்டல் நிர்வாகம் சட்ட நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் நவம்பர் 6ம் தேதி அதற்கு பதிலளித்த விருந்தினர் தனது பொறுப்பை ஒப்புக்கொண்டு, நவம்பர் 7 தேதியிட்ட ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.

இருப்பினும், அது “போதுமான நிதி இல்லை” என்ற குறிப்புடன் பணம் செலுத்தப்படாமல் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. அப்படியிருந்தும், விருந்தினர் அந்த அறையைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருந்தார்.

வேறு வழியின்றி, ஹோட்டல் நிர்வாகம், அதன் மேலாளர் மூலம், டிசம்பர் 4 அன்று பெங்களூரு நகர கூடுதல் உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் (வணிக நீதிமன்றம்) ஒரு உரிமையியல் வழக்கைத் தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக சம்மன் வழங்கப்பட்ட போதும், உறுதிமொழிப் பத்திரம் மட்டும் தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகவோ அல்லது எழுத்துப்பூர்வமான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தவறியதோடு வழக்கிற்கும் ஆஜராகாமல் இருந்ததால், ஒருதலைப்பட்சமாக அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

பதிவேடுகளை (விலைப் பட்டியல்கள், சட்ட அறிவிப்பு மற்றும் திரும்பிய காசோலை) ஆய்வு செய்த பின்னர், டிசம்பர் 6 அன்று, அந்த அறையைத் திறப்பதற்காக ஒரு ஜாமீன் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து அந்த அறை காலி செய்யப்பட்ட நிலையில், அதிலிருந்த ரூ. 5,000 மதிப்புள்ள பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டு அதில் தங்கியிருந்த நபரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இதனால் வெளியேற்றம் தேவையற்றதாகிவிட்டதாகவும் நீதிமன்றம் பதிவு செய்தது.

இதுகுறித்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜிதேந்திரநாத் சிஎஸ் தலைமையிலான பெஞ்ச், நிலுவை தொகையை ஆண்டுக்கு 18% வட்டியுடன் ரூ.15.8 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் வழக்கின் தேதியிலிருந்து டிசம்பர் 9, 2025 வரை ஒரு நாளைக்கு ரூ.15,750 மற்றும் ஜிஎஸ்டியுடன் நஷ்டஈடு வழங்கவும் மார்ச் 13 அன்று, நீதிமன்றம் உத்தரவிட்டது.

[youtube-feed feed=1]