இந்தியாவில் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் GLP-1 வகை மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற அச்சம் காரணமாக, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் ஆன்லைன் மருந்தக கையிருப்பு மையங்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள், வெல்ல்நஸ் கிளினிக்குகள் உள்ளிட்ட 49 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதில், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தல், தவறான விளம்பரங்கள், விதிமுறைக்கு புறம்பாக வழங்குதல் போன்ற மீறல்கள் இருப்பதை கண்டறிவதே நோக்கமாக இருந்தது.
இதுகுறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், இந்த மருந்துகள் விநியோகம் மற்றும் விளம்பரத்தில் ஒழுங்கு நிலை பேணப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் இவ்வகை மருந்துகளின் ஜெனரிக் பதிப்புகள் அதிகமாக கிடைக்கத் தொடங்கியுள்ளதால், ஆன்லைன் மற்றும் ரீட்டெயில் வழியாக எளிதில் கிடைப்பது குறித்து கவலை அதிகரித்துள்ளது.
மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் இந்த GLP-1 மருந்துகளை பயன்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த, மாநில அரசுகளுடன் இணைந்து சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருந்து விநியோக சங்கிலியில் தவறுகளை தடுக்கவும், தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, 2026 மார்ச் 10ஆம் தேதி, இந்த மருந்துகளை தவறாக விளம்பரப்படுத்துவது, மறைமுக விளம்பரங்கள் செய்வது போன்றவற்றுக்கு தடை விதித்து அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது.
சமீபத்திய சோதனைகளில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளின் பாதுகாப்பே முதன்மை என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த மருந்துகள் இந்தியாவில் குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே, மருத்துவர் பரிந்துரையுடன் – எண்டோக்ரைனாலஜிஸ்ட், உடல்நல நிபுணர்கள், சில சமயங்களில் இதய நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் – பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
விதிமுறைகளை மீறுவோருக்கு உரிமம் ரத்து, அபராதம், வழக்கு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
[youtube-feed feed=1]