டெல்லி: எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ஈரான் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததுடன், கத்தார் நாட்டு தலைவர் அமிர் உள்பட பல நாடுகளின் தலைவர்களுடன் பேசினார். விரைவில்  போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார்.

ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான்,  மேற்கு ஆசியப் பகுதியில்  உள்ள குவைத், கத்தார் உள்பட பல வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  சமீபத்தில், “,”கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கத்தார் தெரிவித்துள்ளது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் தொடரும் போருக்கு மத்தியில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில்,  மேற்கு ஆசியப் பகுதியில் உருவாகியுள்ள போர் சூழ்நிலையை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி பல நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். கத்தார், ஓமான், ஜோர்டான், பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாக பேசிய அவர், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை விரைவில் நிலவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சக்தி உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் தொடர்பான கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உலக பொருளாதாரத்தையும் எரிசக்தி பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் என பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண வன்முறை அல்ல, உரையாடலும் தூதரக முயற்சிகளுமே சரியான வழி எனவும் அவர் குறிப்பிட்டார். Tamim bin Hamad Al Thani தலைமையிலான கத்தார் அரசுடன் நடைபெற்ற உரையாடலில், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வழங்கப்படும் உதவிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

உலகின் முக்கிய எண்ணெய் கடற்பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில் தடையில்லா கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அந்தப் பாதையில் ஏற்படும் எந்த இடையூறும் உலகளாவிய வர்த்தகத்துக்கும் எரிசக்தி விநியோகத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கவலை வெளியிட்டார்.

மேற்கு ஆசியப் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் வாழும் வெளிநாட்டு குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன. நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க அனைத்து தரப்பும் அமைதியான தீர்வை நோக்கி செயல்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]