மனைவி தவறான உறவில் உள்ளார் என்பதை நிரூபிக்க குழந்தைகளின் DNA பரிசோதனை கோர முடியாது என்று ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

விவாகரத்து வழக்கின் போது, 59 வயதான கணவன், தனது குழந்தைகள் தன் சொந்த குழந்தைகள் அல்ல என்பதை நிரூபிக்க, இந்திய சாட்சியங்கள் சட்டம், 1872 பிரிவு 45ன் கீழ் DNA பரிசோதனை செய்ய கோரினார்.

2024 ஜூலை மாதம் விசாகப்பட்டினம் மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தார்லதா ராஜசேகர் ராவ், விவாகரத்து வழக்கில் கணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.

“மனைவி தவறான உறவில் இருந்தாலும் கூட, அதை நிரூபிக்க குழந்தைகளுக்கு DNA பரிசோதனை செய்யக் கோர முடியாது. குழந்தைகள் இந்த வழக்கில் தரப்பினராக இல்லாததால் அவர்களின் உரிமை மற்றும் தனியுரிமை பாதிக்கப்படக்கூடாது” என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், திருமணத்தில் பிறந்த குழந்தைகள் சட்டபூர்வமானவர்கள் என்ற வலுவான முன்னெண்ணம் உள்ளது என்றும், DNA பரிசோதனை போன்றவை குழந்தைகளின் மரியாதை மற்றும் சமூக நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எளிதில் உத்தரவிடக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.

மனைவியின் தவறான உறவை நிரூபிக்க, கணவர் வேறு ஆதாரங்கள் மூலம் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

[youtube-feed feed=1]