சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். இதனால், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் கட்சியினரின் கூட்டத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, நடிகர் விஜய்யின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முன்னதாக திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்பமனு பெறப்பட்டது. இந்த நிலையில், திமுக தரப்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் இன்று தொடங்கியது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் இந்த நேர்காணலை நடத்தி வருகின்றனர். முதல்நாளான இன்று தமிழ்நாடு-புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தி.மு.க. தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செலுத்தியவர்களை தொகுதி வாரியாக அழைத்து பேசி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர், முத்தியால் பேட்டை, உப்பளம், உழவர்களை உருளையன்பேட்டை, பாகூர் மண்ணாடிப்பட்டு, காமராஜ் நகர், நெல்லித்தோப்பு, காரைக்கால், மாகி, ஏனாம் உள்பட 30 தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தனர்.
இந்த நேர்காணலை நடத்தி வரும், தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு வந்ததும் ஒவ்வொரு தொகுதியாக அழைத்து விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அவர்களிடம் தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதா? என்றும், கட்சியில் பணியாற்றிய அனுபவம், பற்றி கேட்டறிந்தார். தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்? போன்ற பல்வேறு கேள்விகளையும் கேட்டார். இப்படி ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டறிந்தார்.

இந்த நேர்காணலில் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்களாக உள்ள கென்னடி, செந்தில்குமார், சம்பத், கோபால், காரைக்கால் நஜீம், காரைக்கால் நாக தியாகராஜன், நந்தா சரவணன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் தங்களை பற்றிய விவரங்களை ‘கோப்பாக’ தயார் செய்து வைத்திருந்தனர்.
நாளை காலை தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.நாளை மாலை மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, தேனி வடக்கு தேனி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.அதன் பிறகு மார்ச் 19, 20, 21, 22-ஆகிய தேதிகளில் மற்ற தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
