ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ரிடீமர் பேப்டிஸ்ட் பள்ளி (Redeemer Baptist School) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்த பள்ளி குறித்து நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த பள்ளி, மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடு செலுத்துவதாகவும், அவர்கள் அணியும் உள்ளாடையின் நிறம் முதல் எந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது வரை விதிமுறைகள் விதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கிரீன்ஸ் கட்சியின் எம்.பி. அபிகெயில் பாய்ட், இந்த விவகாரம் தொடர்பாக பல ஆண்டுகளாக புகார்கள் இருந்தபோதும் அதிகாரப்பூர்வமாக விசாரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். தற்போது முன்னாள் மாணவர்கள் மற்றும் தகவல் வெளியிட்டவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த விசாரணையில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீது பள்ளி நிர்வாகம் ஏதேனும் கட்டாய கட்டுப்பாடு அல்லது அழுத்தம் செலுத்தியதா என்பது ஆய்வு செய்யப்படும்.
பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அலெக்ஸாண்ட்ரா கார்த், “தேவாலயத்திற்குள் பிறந்து வளர்ந்தவர்கள் எப்போதும் யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற உணர்விலேயே வாழ்கிறார்கள். நான் யாரை திருமணம் செய்ய வேண்டும், எங்கே வாழ வேண்டும் என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.
பள்ளியின் நிதி நிர்வாகமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசு நிதியாக கோடிக்கணக்கான டாலர்கள் பெற்றிருந்தாலும், ஆசிரியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படாமல், சிறிய உதவித்தொகை மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை நம்பி வாழும் நிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பு, நலன், கல்வித் தரம், ஆசிரியர்களின் பணிநிலை, அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா, அரசு நிதி சரியாக பயன்படுத்தப்பட்டதா போன்ற அம்சங்களும் விசாரணையில் ஆய்வு செய்யப்பட உள்ளன.
மேலும், கடந்த 38 ஆண்டுகளில் சுமார் 50 குழந்தைகள் பள்ளி மற்றும் தேவாலய நிர்வாகிகளின் வீடுகளில் தங்கி வளர்க்கப்பட்டதாக வெளியான தகவல்களும் விசாரணையில் பரிசீலிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் ஏற்கனவே வெளியிட்டிருந்த விளக்கத்தில், “எங்களின் நடைமுறைகள் மற்றவர்களுக்கு புதிதாக தோன்றலாம். அதனால் அவை சட்டவிரோதமானவை, கட்டாயமானவை அல்லது துன்புறுத்தலானவை என்று அர்த்தமில்லை. நாங்கள் சட்டத்தை மதிக்கும், கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும் சமூகமாக செயல்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைக்கான பொதுமக்கள் கருத்து மற்றும் ஆதாரங்களைப் பெறும் நடைமுறை புதன்கிழமை முதல் தொடங்க உள்ளது.
[youtube-feed feed=1]