மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகள் எல்பிஜிக்கு (LPG) மாற்றாக பயன்படுத்தக்கூடிய புதிய எரிபொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
புனேவில் செயல்படும் CSIR-தேசிய வேதியியல் ஆய்வக (CSIR-NCL) விஞ்ஞானிகள், டைய்மெதில் ஈதர் (DME) என்ற எரிபொருளை மெத்தனால் மூலம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறப்பு கத்தலிஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மெத்தனால் எளிதாக DME ஆக மாற்றப்படுகிறது. சுமார் 10 bar அழுத்தத்தில் DME தயாரிக்க முடிவதால், அதை நேரடியாக சாதாரண எல்பிஜி சிலிண்டர்களில் நிரப்ப முடியும் என்பது இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய பலமாகும்.
இந்த முறையை விஞ்ஞானிகள் தற்போது ஒரு நாளுக்கு 250 கிலோ அளவிலான DME தயாரிக்கும் சோதனை (pilot scale) முறையில் வெற்றி கண்டுள்ளனர்.
அடுத்த கட்டமாக, ஒரு தொழில்நுட்ப கூட்டாளியுடன் இணைந்து ஒரு நாளுக்கு 2.5 டன் DME தயாரிக்கும் தொழிற்சாலை மாதிரி அமைப்பை அடுத்த 6 முதல் 9 மாதங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் ஒரு நாளுக்கு 100 முதல் 500 டன் வரை DME தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக எண்ணெய் நிறுவனங்களும் உயிரி எரிசக்தி நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடக்கிறது.
இந்தியா தற்போது தனது எரிசக்தி தேவையின் 80%-க்கும் மேல் இறக்குமதியையே சார்ந்துள்ளது. சமையல் எரிபொருளாக பரவலாக பயன்படுத்தப்படும் LPG-யின் விலை மற்றும் விநியோகம், மேற்கு ஆசியாவில் ஏற்படும் அரசியல் பதற்றங்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் DME, LPG-க்கு துணையாக அல்லது ஒரு பகுதியை மாற்றக்கூடிய சுத்தமான மாற்று எரிபொருளாக பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு நன்மை
- DME எரியும் போது
- புகை (soot) மிகக் குறைவு
- நைட்ரஜன் ஆக்சைட்கள் (NOx),
- சல்பர் ஆக்சைட்கள் (SOx),
- துகள்கள் (particulate matter)
மிகக் குறைவாக வெளியேறும். இதனால் இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிபொருளாக கருதப்படுகிறது.
இந்த சாத்தியத்தை கருத்தில் கொண்டு இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) நிறுவனம் IS 18698:2024 என்ற தரநிலையை வெளியிட்டு, LPG-யில் 20% வரை DME கலக்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் 8% வரை DME கலப்பதற்கு தற்போதுள்ள LPG சிலிண்டர், ரெகுலேட்டர், குழாய் அல்லது அடுப்பு போன்றவற்றில் மாற்றம் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு இந்தியா சுமார் 21 மில்லியன் டன் LPG இறக்குமதி செய்துள்ளது.
LPG பயன்பாட்டில் 8% அளவுக்கு DME பயன்படுத்தினால் ஆண்டுக்கு சுமார் ₹9,500 கோடி வரை வெளிநாட்டு நாணயச் செலவு சேமிக்க முடியும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
எதிர்காலத்தில் DME தயாரிக்க தேவையான மெத்தனால், நிலக்கரி (coal), உயிரி கழிவுகள் (biomass) மூலம் தயாரிக்க முடியும். மேலும் கார்பன் டையாக்சைடை (CO₂) பயன்படுத்தி DME தயாரிக்கும் வழிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த ஆய்வுத் திட்டத்தை CSIR-NCL-இன் Catalysis பிரிவில் பணியாற்றும் திருமலைசுவாமி ராஜா தலைமையிலான குழு முன்னெடுத்துள்ளது.
மேலும், 100% LPG முதல் 100% DME வரை எந்த கலவையிலும் இயங்கக்கூடிய புதிய அடுப்பு மாதிரியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அடுப்பு பெங்களூருவில் உள்ள LPG உபகரண ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]