ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தத் தடையை மீண்டும் பரிசீலிக்க நீதிமன்றம் முன்பு கூறியிருந்ததால், நிபுணர் குழு அதைப் பற்றி மறுபரிசீலனை செய்ததாகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தத் தடை அவசியம் என மீண்டும் பரிந்துரைத்ததாகவும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முதன்மை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் (NBTC) மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 2017-ல் வெளியிட்டுள்ள “Blood Donor Selection and Donor Referral Guidelines” என்ற வழிகாட்டுதலுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதலின் படி, திருநங்கைகள், ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பாலியல் தொழிலில் இருக்கும் பெண்கள் ஆகியோர் எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு அதிக ஆபத்து உள்ள பிரிவில் வருவதாகக் கருதி அவர்களுக்கு ரத்ததானம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மனுதாரர்களின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜெய்னா கோத்தாரி, இந்த முடிவு பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்கம் (sexual orientation) அடிப்படையில் மனிதர்களை குறிவைப்பதாகக் கூறினார். ரத்ததானம் செய்யப்படும் ஒவ்வொரு ரத்தமும் பயன்படுத்துவதற்கு முன் எச்.ஐ.வி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக NAT பரிசோதனை செய்யப்பட்டால் தொற்று அபாயத்தை கண்டறிய முடியும் என்றும் அவர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த முதன்மை நீதிபதி, ஏழை மக்கள் தான் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளில் இலவச ரத்தத்தை பெறுகின்றனர். மிகச்சிறிய அளவிலாவது தொற்று அபாயம் இருந்தாலும் அது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும், ரத்ததானமும் ரத்தம் பெறுவதும் விருப்பத்தின் அடிப்படையில் நடக்கும் விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் தற்போது மூன்று மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டவை.

மத்திய அரசு இதற்குமுன், 2023-ம் ஆண்டு தாக்கல் செய்த சத்தியப்பிரமாணத்தில், திருநங்கைகள், ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பாலியல் தொழிலில் உள்ள பெண்களுக்கு எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் B மற்றும் C போன்ற தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என அறிவியல் ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருந்தது.

அதேசமயம், யாருக்கு ரத்ததானம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என்பதைக் குறித்து மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் தான் முடிவு செய்கிறது என்றும், இந்த முடிவுகள் அனைத்தும் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனுதாரர்கள் தரப்பில், இந்த 2017 வழிகாட்டுதல்கள் LGBTQ+ சமூகத்தினரின் சமத்துவம், மரியாதை மற்றும் வாழ்வுரிமையை மீறுகின்றன என்று கூறப்படுகிறது. பாலின அடையாளம் அல்லது பாலியல் நோக்கம் மட்டும் அடிப்படையாக கொண்டு ஒருவரை ரத்ததானம் செய்ய விடாமல் தடுப்பது தவறு என்றும், அறிவியல் ஆதாரமற்றது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற பல நாடுகள் கடந்த சில ஆண்டுகளில் விதிமுறைகளை மாற்றி, ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரத்ததானம் செய்ய அனுமதி அளித்துள்ளன என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1980-களில் இருந்த பழைய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டதாகவும், தற்போது ரத்த பரிசோதனை தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளதால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

[youtube-feed feed=1]