டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய AI உச்சி மாநாட்டில் மேலாடையின்றி போராட்டம் நடத்திய விவகாரத்தில் டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல், பிரியங்கா கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த வாரம் ஏஐ உச்சி மாநாடு ஏப்ரல் 12ந்தேதி தொடங்கி 21ந்தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாடு, மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. மாநாட்டில் 20 நாடுகளின் தலைவா்கள், 60 அமைச்சா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இவர்களுடன் பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களான கூகுள், ஓபன்ஏஐ, மைக்ரோசாஃப்ட் என பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள் பங்கேற்றிருந்தன.
இந்த மாநாட்டு நிகழ்வுக்கு வந்திருந்த டெல்லி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட நிர்வாகிகள், திடீரென தங்களது சட்டையை களைந்துவிட்டு, மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்களின் ஆடையில், இந்தியா-அமெரிக்க இடையேயான ஒப்பந்தம் சமரசத்தால் செய்யப்பட்டது போன்ற வாசகங்கள் காணப்பட்டது..
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இவர் இந்த சம்பவத்தில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
இவர்மீது, குற்றப்பிரிவு சதி, பொது ஊழியர்கள் மீதான தாக்குதல் மற்றும் கடமையைத் தடுத்தல் என பல பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தபோராட்டம் ஜனநாயகமானது காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. ஆனால், மற்ற கட்சிகள் இது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் என்று கண்டித்து வருகிறார். மேலும், இந்த செயல் இந்தியாவின் பிம்பத்திற்கு தீங்கு விளைவித்ததாக பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “மோடிஜி, அவமானம் என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர்கள் ஒன்றாகக் காணப்படுகின்றன, இவ்வளவு மோசமான குற்றவாளியுடன் இணைக்கப்பட்டுள்ளன – இது அவமானகரமான விஷயம்.
நீங்கள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதில் நீங்கள் நாட்டையே விற்றுவிட்டீர்கள் – அது வெட்கக்கேடானது. நீங்கள் எங்கள் நாட்டின் தரவுகளை ஒப்படைத்துவிட்டீர்கள். நீங்கள் விவசாயிகளை அழித்துவிட்டீர்கள். நீங்கள் ஜவுளித் தொழிலை அழித்துவிட்டீர்கள் – அது வெட்கக்கேடானது என கடுமையாக சாடியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வெளியிட்டுள்ள எக்ஸ் பபதிவில், , சத்தியத்திற்கான அமைதியான மற்றும் வன்முறையற்ற எதிர்ப்பு என்பது நமது பெருமைமிக்க பாரம்பரியமாகும். இது மகாத்மா காந்தியிடமிருந்தும் நமது இந்திய மூதாதையர்களிடமிருந்தும் பெறப்பட்டது.
உலகளாவிய அழுத்தத்திற்கு அடிபணிந்து இந்தியாவின் நலன்கள் சமரசம் செய்த பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவது இந்தியர்களின் நலனுக்காகும்.
மக்களுக்காகக் குரலை உயர்த்தியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது. இளைஞர் காங்கிரஸின் அச்சமற்ற வீரர்களுடன் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கிறது என்று அவர் கூறினார்.
[youtube-feed feed=1]