டெல்லி:  செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கரவாத அமைப்பு திட்டம்  தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது.

தலைநகர் டெல்லி செங்கோட்டை, சாந்தினி சௌக் பகுதிக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாக  கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அச்சுறுத்தல் இருப்பதாக இன்டெல் எச்சரித்ததை அடுத்து டெல்லியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2026 பிப்ரவரி 6ம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த மசூதி குண்டுவெடிப்பில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில், இந்தியாவில் முக்கியமான கோவில்களை குறிவைத்து ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டைக்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 12 பேர் பலியாகிய விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், மீண்டும் குண்டுவெடிப்பு நடத்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதஅமைப்பு திட்டமிட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பழைய டெல்லி, சாந்தினி சவுக், டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.  மேலும் சுற்றுலா பயணிகள், வாகனங்கள் என பல பகுதிகளில் சோதனையையும்  தீவிரப்படுத்தி உள்ளனர்.

பொதுமக்களும் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம், பொருட்கள் குறித்து  உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்  டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.