இந்திய உணவு மற்றும் பானங்கள் துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
1.77 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள் பயன்படுத்திய பான்-இந்தியா பில்லிங் மென்பொருளில் சேமிக்கப்பட்டிருந்த 60 டெராபைட்ட்கள் (TB) அளவிலான தரவுகளை Big Data மற்றும் AI கருவிகள் மூலம் ஆய்வு செய்தபோது இந்த பெரிய அளவிலான மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2019–20 முதல் தற்போது வரை குறைந்தபட்சம் ₹70,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் வரி கணக்குகளில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ₹13,317 கோடிக்கு மேற்பட்ட பில்லிங் பதிவுகள் பில்லிங் செய்யப்பட்ட பிறகு நீக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல உணவகங்களில் பில்லிங் மென்பொருளை பயன்படுத்தி விற்பனை தொகையை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது இந்த ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து முதல் கட்டமாக ஹைதராபாத் நகரில் உள்ள 40க்கும் மேற்பட்ட பிரியாணி உணவக சங்கிலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் சுமார் ₹400 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த பில்லிங் சாப்ட்வேர் நிறுவனம் இந்தியாவில் உள்ள உணவக பில்லிங் மென்பொருள் சந்தையில் சுமார் 10% பங்கை கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் மட்டும் கர்நாடகாவில் சுமார் ₹2,000 கோடி, தெலுங்கானாவில் ₹1,500 கோடி மற்றும் தமிழ்நாட்டில் ₹1,200 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்த விசாரணையை ஹைதராபாத் பிரியாணி உணவகங்களுடன் மட்டும் நிறுத்தாமல், நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
[youtube-feed feed=1]